×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் ‘அகல’ பணியால் அகலம் குறைந்தது

ஒட்டன்சத்திரம், பிப். 8: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலை அகலம் குறைந்து விட்டது. இதனால் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் மார்க்கெட்டிலிருந்து தாராபுரம் சாலை வரை கழிவுநீர் கால்வாய் செல்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இக்கால்வாயை அகலப்படுத்துவதற்காக நீண்ட குழிகள் தோண்டப்பட்டன. அதன்பின் மார்க்கெட் பைபாஸ் சாலை மிக குறுகியதாக மாறி விட்டது. தற்போது இப்பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.
இச்சாலை வழியாகத்தான் அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தையம், ஓடைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வருகின்றனர், மேலும் 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும், மருத்துவமனைகளும் உள்ளதால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவுநேரங்களில் எதிர்வரும் வாகனங்கள் செல்ல வழிவிட ஒதுங்கும்போது கால்வாய் குழாய்களில் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : market bypass road ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் ‘அகல’ பணியால் அகலம் குறைந்தது