×

குமரி பிஎஸ்எப் அதிகாரி சாதனை

நாகர்கோவில், பிப். 7: மகாராஷ்டிரா மாநிலத்தில் 39வது தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடந்தது.
இந்த போட்டியில் குமரி மாவட்டம் கண்டன்விளை சித்தன்தோப்பு பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி சேகர், தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டார். அவர் 1500 மீட்டர் ஓட்டம், 1600 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவில் வெள்ளி பதக்கங்களையும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
புத்தக கண்காட்சி கால்கோள் விழா
நாகரகோவில், பிப். 7 : நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி கால்கோள் விழா நேற்று நடந்தது.
குமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் புத்தக கண்காட்சியை நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே அனாதைமடத்தில் வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்த உள்ளது. இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், வரலாறு, பொது அறிவு மற்றும் போட்டி தேர்வு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
மழலையர், சிறுவர், பெரியவர் என அனைத்து தரப்பு வாசகர்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான அனைத்துவித புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் உலக நாடுகளின் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளது. மேலும் கவியரங்கம், நகைச்சுவை சொற்பொழிவு போன்றவையும் நடத்தப்பட
உள்ளன.
 இந்த புத்தக கண்காட்சி பந்தல் கால்கோள் விழா நேற்று காலை நாகர்கோவில் அனாதை மடத்தில் நாகர்கோவில் சப் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) மாடசுவாமி சுந்தர்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி, மாவட்ட கலெக்டரின் சிறப்பு அலுவலர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், குமரி மெட்ரிக் பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

Tags : Kumari PSF ,
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...