×

எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி

கள்ளக்குறிச்சி, பிப். 8: கள்ளக்குறிச்சி அடுத்த தியாக துருகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: குக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தது தான். வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால் அதனை நேரடியாக சுட்டிக்காட்டி வழக்கின் தீர்ப்பை குறித்து பேசியுள்ளனர். அப்போது தேர்தல் வரும் என்ற காரணத்தினால் கட்சிக்கு பெயரும், சின்னமும் கேட்டு இந்தோம். மார்ச் 14ல் குக்கர் சின்னத்தையும், அமமுக பெயரையும் அறிவித்தோம். இதை எதிர்த்து எடப்பாடி அன்கோ மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென கூறினர். ஆனால் வழக்கு அதிகம் இருப்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால் குக்கர் சின்னம் குறித்து நீதிமன்றம் உத்தரவால் பின்னடைவு கிடையாது. சம்மட்டி அடியும் கிடையாது.

உச்ச நீதிமன்றம் சரியான அறிவிப்பை கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வேறு சின்னம் கொடுக்க முடியாது. சின்னத்தை பரிசீலிக்க சொல்லவில்லை, கொடுக்கத்தான் சொல்லியுள்ளனர். 4 வாரத்தில் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் கேட்க கூடிய சின்னத்தை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். சின்னம் என்பது முக்கியம் அல்ல. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சின்னத்தை வைத்துதான் வாக்கு என்பது இல்லை, இதற்கு ஆர்கேநகர் தான் சான்று. எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் நாங்கள் ஜெயிப்போம். மக்கள் விருப்பபட்டால் சின்னம் என்பது முக்கியம் அல்ல. தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்தால் அதனை மாற்ற முடியாது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

ஆகவே சின்னம் என்பது பிரச்னையே இல்லை. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் குக்கர் சின்னம் கொடுப்பார்கள். தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பலன் கிடையாது. இந்த அரசால் நீட் தேர்விற்கு கூட விலக்கு வாங்க முடியவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கியிருப்பார். 11 சட்டமன்ற உறுப்பினர் வழக்கு விசாரணை முடிந்தால் தெரியும், பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வரும். அதனால் அரசுக்கு செலவினம் குறையும்.இவ்வாறு அவர் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பிரபு எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை