×

பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த டெம்போ திருடிய கும்பலை விடுவித்த போலீசார்

ஓமலூர், பிப்.5:ஓமலூர் அருகே நள்ளிரவில் டெம்போவை திருடிய கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வாகனத்தை விடுவித்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அருகே, காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஜெயபிராஷ்(30). இவர் ஓமலூர் பைபாஸ் பகுதியில் டெம்போ, கார் உள்ளிட்டவைகளை பழுது பார்க்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பட்டறையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பட்டறைக்கு பழுது பார்ப்பதற்காக வந்த ஒரு டெம்போவை, பட்டறை முன்பாக நிறுத்திவிட்டு சென்றார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பட்டறையின் முன் நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை, ரெக்கவரி வேன் மூலம் ஒரு கும்பல் திருடி சென்றது. ரெக்கவரி வேன் அதே இடத்தில், எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகி நின்றது. அப்போது, பட்டறையில் இருந்து டெம்போவை மர்ம நபர்கள் எடுத்து சென்றதை அறிந்த ஜெயபிராஷ் மற்றும் பொதுமக்கள் டெம்போவை மீட்டனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட கும்பலையும், ரெக்கவரி வேனையும், ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, நேற்று காலை புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றபோது, ரெக்கவரி வேன் மற்றும் திருட்டு கும்பலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், டெம்போவை திருட பயன்படுத்திய ரெக்கவரி வேன் மற்றும் தாங்கள் பிடித்து கொடுத்த திருட்டு கும்பலை போலீசார் விட்டு விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : public ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...