×

மூணாறு அருகே திறப்பு விழாவிற்கு தயாராகும் ஹைடெக் காவல் நிலையம்

மூணாறு, பிப். 1: மூணாறு அருகே உடும்பன்சோலை பகுதியில் ஹைடெக் காவல் நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் அமையும் முதல் அதிநவீன காவல் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. மூணாறில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உடும்பன்சோலை. இப்பகுதியில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காவல்நிலையம் செயல்பட்டு வந்தது. பின்னர் சில காரணங்களால் இங்கு அமைக்கப்பட்டிருந்த காவல்நிலையம் சாந்தன்பாறை பகுதிக்கு மாற்றப்பட்டது. காவல்நிலையம் உடும்பன்சோலை பகுதியில் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பு இன்றி வாழ்க்கையை கழித்துவந்தனர். காவல்நிலையம் இப்பகுதியில் இல்லாத காரணத்தால் சில சமூகவிரோத செயல்கள் தினமும் நடந்தது. மேலும் கள்ளச்சாராயம்,  சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பது, கஞ்சா விற்பனை போன்ற ஏராளமான சமூக விரோத செயல்கள் இப்பகுதியில் அதிகரித்து வந்தது.இதன் காரணமாக பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சமூகவிரோத செயல்களை தடுக்க காவல்நிலையம் வேண்டும் என்று கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிக காவல்நிலையம் இப்பகுதியில் அமைக்கப்பட்டது. தினமும் ஏரளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் இவர்களின் பாதுகாப்பிற்கு நிரந்தர காவல்நிலையம் கட்டவேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் மூலம் உடும்பன்சோலை பகுதியில் புதிய காவல்நிலையம் கட்டுவதற்கு கடந்த கேரள பட்ஜெட்டில் ரூ.3.45 கோடி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் போர்க்காள அடிப்படியில் நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. ஹைடெக் முறையில் கட்டப்பட்டுள்ள இந்த காவல் நிலையம் இடுக்கி மாவட்டத்தில் முதல் அதிநவீன காவல் நிலையம் என்ற பெருமை பெறுகிறது. காவல்நிலையத்தின் திறப்பு விழா பிப்ரவரி 10ம் தேதி கேரள முதல்வர் பினராய்விஜயன் திறந்து வைக்கிறார்.



Tags : police station ,opening ceremony ,Munnar ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...