×

காரிமங்கலம் அருகே எருது விடும் விழா நடத்துவதில் சிக்கல்

காரிமங்கலம், ஜன.18:  காரிமங்கலம் அருகே எருது விடும் விழா நடத்துவதில் இரண்டு கிராம மக்கள் தொடர்ந்து புகார் கூறியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடிவில் சென்ற ஆண்டை போல் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சியில், பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம். இதில் பந்தாரஅள்ளி, கீழ் சவுளுப்பட்டி, மண்ணாடிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த எருதுகள் கலந்து கொள்ளும். கடந்த ஆண்டு எருது விடும் விழாவில் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு எருதுவிடும் விழாவை அமைதியாக நடத்த, காரிமங்கலம் தாசில்தார் கேசவமூர்த்தி தலைமையில் கடந்த வாரம் ஆலோசைன கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இரு கிராமத்தினரும் பிரச்னை ஏற்படாமல் எருதுவிடும் விழாவை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது
நாளை (சனிக்கிழமை) எருதுவிடும் விழா நடக்கும் சூழ்நிலையில், இரு கிராமத்தை சேர்ந்தவர்கள், தாலுகா அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளனர். இப்புகாரை அடுத்து இரு கிராமத்தினருக்கும் இடையே நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கடந்த ஆண்டு வழக்கமாக எப்படி விழா  நடைபெற்றதோ அதே அடிப்படையில், நாளையும் எருதுவிடும் விழாவை நடத்த வேண்டும். இதில் எவ்வித மாற்றம் செய்யக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பந்தாரஅள்ளி ஊராட்சியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : bull festival ,Calimangalam ,
× RELATED கிருஷ்ணகிரியில் எருது விடும் திருவிழா