×

சின்னார் சோதனைச்சாவடியில் டூவீலரில் வரும் பயணிகளிடம் ₹1000 லஞ்சம் கேட்கின்றனர் மூணாறின் அழகை ரசிக்க வருபவர்கள் புலம்பல்

மூணாறு, ஜன.11: மூணாறின் அழகை ரசிக்க டூவீலரில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சின்னார் சோதனைச்சாவடியில் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதாக புகார் எழுந்துள்ளது.மூணாறு மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குளிரின் அளவு உயர்ந்து மைனஸ் 4 டிகிரி செல்சியஸாக காணப்படுகிறது. காலை நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் கடும் குளிர் மற்றும் உறைபனியும் நிலவுகிறது.

இந்த அருமையான சூழ்நிலையை அனுபவிக்க மூணாறுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் டூவீலரில் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். மூணாறில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவும், தங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு சென்று அழகை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் டூவீலரில் விரும்பி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2600 வாகனங்கள் மூணாறுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு டூவீலர் வாகனங்களில் பெரும்பாலானோர் 30 வயதிற்கும் கீழ் மற்றும் புதுமணத் தம்பதிகளாக உள்ளனர். .மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான டூவீலர் வாகனங்களில் பயணிகள் வருகின்றனர்.
மூணாறுக்கு வரும் அவர்களிடம் தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள சின்னார் சோதனைச்சாவடியில் கேரளா எல்லைக்குள் நுழைய 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணி கிறிஸ்டோபர் கூறுகையில், `` தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பல இடங்கள் சுற்றி விட்டு மூணாறின் அழகை ரசிக்க வரும்போது கேரள எல்லையில் நுழைய சோதனைச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் வாங்குகின்றனர். இதற்கான ரசீதுகள் வேண்டும் என்றால் ரசீதுகள் கொடுக்க மறுக்கின்றனர் பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு கேரள எல்லைக்குள் நுழைய விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : travelers ,checkpoint ,Chinnar ,Munnar ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...