×

சபரிமலை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

நாகர்கோவில், ஜன. 4: குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த செப். 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை முதலில் வரவேற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் பின்னர் அரசியல் ஆதாயத்துக்காகவும், மக்கள் மத்தியில் பிரச்னையை உருவாக்கவும் இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிக்கக்கூடாது என கூறி போராட்டம் என்ற பெயரில் கலவரங்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் கடந்த நவ. 22ம் தேதியன்று சபரிமலைக்கு மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் சென்றபோது அவரது காரை மட்டும் அனுமதித்த காவல் துறையினர், சபரிமலையில் பிரச்னை இருப்பதால் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களை அனுமதிக்கவில்லை.  இந்த நிகழ்ச்சியை வைத்து, காவல் துறையினர் தன்னை அவமானப்படுத்தியதாக ராதாகிருஷ்ணன் கூறியதுடன், குமரி மாவட்டத்தில் பந்த் என்ற பெயரில் அரசு பேருந்துகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாவட்ட காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் சபரிமலையின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி குமரி மாவட்டத்தில் குலசேகரம் பகுதியில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் உருவபொம்மையை எரித்தனர். ஆனால் காவல் துறையினர் இந்த நிகழ்வை தடுக்கவில்லை. தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் புதன்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து கேரளா சென்ற கேரள பேருந்தில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக அனுப்ப வேண்டிய  காவல்துறையினரே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு பேருந்துகளை காலியாக அனுப்பி வைத்தனர். மேலும் செம்பொன்காலை, வைராவிளை, கோட்டார் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியுவின் கொடிகம்பங்களை வன்முறை கும்பல் வெட்டி சேதப்படுத்தியுள்ளதுடன் பல இடங்களில் கேரள முதல்வர் உருவப்பொம்மையை எரித்தும், அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.   கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் மக்களின் வாழ்வாதார  பிரச்னைகளுக்கு எதிராகவும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் நடத்தும் இயக்கங்களுக்கு, போராட்டங்களுக்கு தடை விதித்து வழக்கு போடும் காவல் துறையினர் குமரிமாவட்டத்தில் பந்த் என்ற பெயரில் பாஜக நடத்தும் வன்முறைகளையும், மக்களை பிளவுப்படுத்தும் மதவெறி பிரச்சாரங்களையும் அனுமதிப்பதையும், கண்டுகொள்ளாமல் இருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  மாவட்டத்தில் அமைதியை நிலவச் செய்வது காவல்துறையின்  கடமை என்பதை உணர்ந்து மாவட்ட காவல்துறை செயல்பட வேண்டும்.

Tags : parties ,Sabarimala ,Marxist ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்