×

பழைய சந்தை மேட்டு பகுதியில் உள்ளகாய்கறி கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஆரணியில் பரபரப்பு

ஆரணி, ஜன.3: பழைய சந்தை மேட்டு பகுதியில் உள்ள காய்கறி கடைகளை அகற்றக்கோரி வியாபாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆரணி தற்காலிக காய்கறி மார்க்கெட்டை புறக்கணித்து வியாபாரிகள், பழைய சந்தை மேடு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை அகற்றகோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி நகராட்சியில் இருந்த காய்கறி மார்க்கெட் கடைகள் கடந்த நவம்பர் 24ம் தேதி பழுதடைந்த கடையின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதனால், நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த அனைத்து கடைகளையும் இடித்தன.இதையடுத்து, வியாபாரிகள் பழைய சந்தை மேட்டு பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டனர்.தொடர்ந்து, புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கும் வரை தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைத்து தர கோரி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று ஆரணி நகராட்சி வளாகத்தின் பின்புறத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு அங்கு 110 கடைகள் கட்டப்பட்டு கடந்த 28ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அங்கு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், பழைய சந்தை மேட்டு பகுதிகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கடைகளை மாற்றாமல் அங்கேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் தற்காலிக மார்க்கெட் பகுதிக்கு வருவதில்லையாம்.தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகளில் ஒரு நாளைக்கு ₹200 முதல் ₹300 வரை மட்டுமே வியாபாரம் நடைபெறுவதால் அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறாதாம்.இதையடுத்து, தற்காலிக மார்க்கெட் பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் தங்களுக்கும் பழைய சந்தை மேட்டு பகுதியில் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் அங்கு வைத்திருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பழைய சந்தை மேட்டு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் நகர காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடந்தி அப்பகுதியில் வைத்திருந்த கடைகளை அகற்றி தற்காலிக மார்க்கெட் பகுதியில் வைத்துக்கொள்ள உத்திரவிட்டனர்.மேலும், அப்பகுதியில் மீண்டும் கடை வைத்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : market hub ,demonstration ,merchants ,shops ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...