×

தங்கம்மா ஓடை சீரமைப்பு பணி தாமதம்

உடுமலை, டிச. 28: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்படும்போது, 7 குளங்கள் நிறைந்து தங்கம்மா ஓடை வழியாக உப்பாற்றில் கலந்து தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையில் கலக்கிறது. பழமையான இந்த கால்வாயில், காலப்போக்கில் உடுமலை நகரின் சாக்கடை நீர் கலந்தது. தற்போது கழிவுநீர் கால்வாய் போல் காட்சி அளிக்கிறது. சுற்றிலும் குடியிருப்புகளும் ஏற்பட்டன. மேலும் முட்செடிகள் வளர்ந்தும், தூர் வாரப்படாததாலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதையடுத்து, தங்கம்மா ஓடையை தூர்வாரி, கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர்  அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓடையை சுற்றியிருந்த 350 குடியிருப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை ஓடை சீரமைக்கும் பணி துவங்கவில்லை. அதையொட்டிய சாலையும் அகலப்படுத்தப்படவில்லை. ஊமத்தம் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே, உடனடியாக ஓடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு