×

விஐடியில் இந்திய பொருளாதார கூட்டமைப்பு கருத்தரங்கம் கடைக்கோடி மக்கள் வளர்ச்சியடைய ஆய்வு செய்ய வேண்டும் கவர்னர் பன்வாரிலால் பேச்சு

வேலூர், டிச. 28: நாட்டில் கடைக்கோடி மக்கள் வளர்ச்சியடைய பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டார்.வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார கூட்டமைப்பு சார்பில் 101வது கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் வரவேற்றார். கூட்டமைப்பின் தலைவர் மகேந்திரதேவ் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தும், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:2ம் நூற்றாண்டு வரை, இந்தியா வளர்ந்த நாடாக விளங்கியது. இதற்கு காரணம் உள்நாட்டு உற்பத்தியும், அதிகளவில் வர்த்தகமும் நடந்துள்ளது. அப்போது பண்டமாற்று முறைகள் கையாளப்பட்டுள்ளது. அதன்பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர்களின் உற்பத்தி பொருட்களை தீவிரமாக சந்தைப்படுத்த தொடங்கினர். இதனால் நம் நாட்டின் வளர்ச்சி முடங்கியது. 2ம் நூற்றாண்டை ஒப்பிடுகையில், 18ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சி 24.4 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால், 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறும்போது, நாட்டின் வளர்ச்சி 24.2 சதவிதமாக குறைந்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன், வெளிநாட்டு முதலீடும், கல்வி வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

ஆனாலும் கடைக்கோடியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றமடையவில்லை. பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், கடைக்கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் ஆய்வு செய்ய வேண்டும். வேளாண் நிலங்கள் குடியிருப்புகளாவது வருத்தத்திற்குரியது. நாட்டின் வளர்ச்சிக்கு வெளிப்படை தன்மை அவசியம். மக்களின் வாழ்க்கை தரம், வேளாண்மை, பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, திறன் வளர்ப்பு ஆகியவற்றை அதிகரிக்க பொருளாதார நிபுணர்கள் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஐடியில் பொருளாதார கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் 22 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். பொருளாதார நிபுணர்கள்தான், நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்களின் கண்களை திறக்க வேண்டும்.இந்தியாவின் மக்கள் தொகை 136 கோடி. இது உலகளவில் 18 சதவீதம். நிலப்பரப்பில் 2.5 சதவீதமும், 4 சதவீதம் தண்ணீரும்தான் உள்ளது. எனவே, நிலத்தையும் தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும். வீடு அவசியம் என்றாலும், விளைநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கட்டுமான பணிகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழகத்தில் 41 ஆயிரம் நீர்த்தேக்கங்களை பாதுகாக்க வேண்டும். மற்ற நாடுகள் கல்விக்காக தங்கள் வருவாயில் 7 முதல் 9 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்கின்றன. ஆனால் இந்தியாவில் 4 சதவீதமாக மட்டுமே உள்ள கல்விக்கான ஒதுக்கீட்டை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது கருப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவைதான். இவற்றை களைய வேண்டும். தேர்தல் பணிக்காக ஒரு ஆண்டை செலவிட வேண்டும். மீதமுள்ள 4 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, மக்கள் திட்டங்களுக்காக செயலாற்ற வேண்டும்.நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க பொருளாதார நிபுணர்கள் வழி காண வேண்டும். நாட்டில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 55 சதவீதம் பேர் இருக்கின்றனர். இதுதான் வளர்ச்சிக்கான சரியான நேரம். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் விஐடி இணைத் துணை வேந்தர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய பொருளாதார கூட்டமைப்பு பொதுசெயலாளர் மற்றும் பொருளாளர் அனில்குமார் தாகூர் நன்றி கூறினார். இக்கருத்தரங்கம் 3 நாட்கள் நடக்கிறது. இதில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Tags : Indian Economic Conference ,
× RELATED கடைசி கட்ட தேர்தலில் இம்பேக்ட்...