×

தமிழகம் முழுவதும் உணவு பொருள் கடத்தலில் பறிமுதலான வாகன விவரங்கள் சேகரிப்பு பல ஆண்டுகள் கழித்து ஏலம்விட நடவடிக்கை

வேலூர், டிச. 28: தமிழகம் முழுவதும் உணவு பொருள் கடத்தலில் பறிமுதலான வாகன விவரங்கள் சேகரிக்கப்படுவதன் மூலம், பல ஆண்டுகள் கழித்து ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் சுமார் 34,000 ரேஷன் கடைகள் மூலம், 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை ரேஷன்கடைகள் மற்றும் குடோன்களில் இருந்து திருட்டுத்தனமாக பெற்றும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கியும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு கடத்திச்சென்றும் விற்பனை செய்து சிலர் லாபம் பார்த்து வருகின்றனர்.

இதனை தடுக்க மாவட்டம்தோறும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்கள் உணவுப்பொருட்கள் கடத்துபவர்களை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த வாகனங்கள் முழுவதுமாக ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. கலெக்டர் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உணவு பொருள் கடத்த பயன்படுத்திய வாகனங்கள் ஏலம் விடப்படாமல் அந்தந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகங்களில் மண்ணில் மக்கி வருகிறது.அதேபோல் வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் போலீஸ் நிலையம் உள்ளேயும், சாலைகளிலும் ஆக்கிரமித்து விடப்பட்டுள்ளது. இப்படி பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மழை, வெயிலில் துருப்பிடித்து வீணாகி வருகிறது. அதேசமயம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் நிறுத்தப்படுவதால் அப்பகுதி மக்களும் அடிக்கடி போலீஸ் நிலையம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதில், வேலூர் மாவட்டத்தில் 4 சக்கர வாகனங்கள் 171, மூன்று சக்கர வாகனங்கள் 45, இரு சக்கர வாகனங்கள் 45 என மொத்தம் 261 வாகனங்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து ஏலம் விட ஆரம்ப கட்ட முயற்சி தொடங்கியுள்ளது.

Tags : bidder ,Tamil Nadu ,state ,
× RELATED நீலகிரி, கொடைக்கானலில் இ பாஸ் முறையை...