பழநி, டிச. 19: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திண்டுக்க மாவட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் சிறப்பு பூஜையுடன் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் தம்பதி சமேதரராக லக்குமி நாராயண பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதுபோல் பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு தம்பதி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு பரமதவாசல் வழியை கடந்து சென்றனர். கோயிலில் புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்ளுக்கு 1 டன் அளவில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பயறு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், சுவாமி, மகாலட்சுமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.