×
Saravana Stores

கேரள மாணவர்கள் பாதிப்பு எதிரொலி; கொடைக்கானலில் உணவகங்கள் கடைகளில் அதிரடி சோதனை

கொடைக்கானல், நவ. 15: கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த நவ.11ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட கேரள மாணவ, மாணவிகள் சுமார் 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு நேற்று முன்தினம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த ஓட்டலில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த உணவு விடுதியை தற்காலிகமாக மூடி நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள உணவு விடுதிகள், உணவகங்கள், மளிகை கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் லாரன்ஸ், கண்ணன், ராமசாமி, ஜாபர் சாதிக், ஜஸ்டின் அமல்ராஜ், ஜோதிமணி ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி கூறியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள தனியார் உணவு விடுதியில் சாப்பிட்ட கேரள மாணவ, மாணவிகளுக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டது. இங்கு உணவு மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவில் காலாவதியான உணவு விநியோகிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. இதை மீறி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

The post கேரள மாணவர்கள் பாதிப்பு எதிரொலி; கொடைக்கானலில் உணவகங்கள் கடைகளில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kodaikanal ,Kodaikanal Government Hospital ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலுக்கு சுற்றுலா கேரள மாணவ, மாணவிகள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம்