×
Saravana Stores

திண்டுக்கல்லில் நடந்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல், நவ. 15: தேசிய குழந்தைகள் தினம் (நவ.14) உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் (நவ.19) மற்றும் சர்வதேச குழந்தைகள் தினம் (நவ.20) ஆகிய தினங்களை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று முதல் நவ.20ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் பூங்கொடி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். அதன்படி, ‘நான் பாதுகாப்பான குழந்தை பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்தி கொள்வேன். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளான குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதை பொருள் பயன்பாடு, குழந்தை தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்த விதமான குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன்.

சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்துவேன். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதி செய்வேன். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் என் கவனத்திற்கு வரும்பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன்.

நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று மனதார உறுதியளிக்கிறேன். குழந்தை நேய சமூகத்தை இணைந்து உருவாக்குவோம், உறுதி செய்வோம்’ என கலெக்டர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்று கொண்டனர். பின்னர் குழந்தைகளுக்கான நடை என்ற தலைப்பில் நடைபெற்ற ஊர்வலத்தை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி அஞ்சலி பைபாஸ் வரை சென்று திரும்பி மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

பேரணியின் முடிவில் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ‘எதிர் காலத்தை கேளுங்கள்’ என்னும் தலைப்பில் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி தெய்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர் (கல்வி) சரவணக்குமார், நன்னடத்தை அலுவலர் ஜோதிமணி, குழந்தைகள் நலக்குழு தலைவர் சேவியர், உறுப்பினர் எலிசிபாய் மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு, காவல் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், கல்வி துறையினர், சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியளார்கள், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள், நேரு யுவகேந்திரா, தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் நடந்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Awareness Week ,Dindigul Dindigul ,National Children's Day ,World Day for the Prevention of Violence against Children ,International Children's Day ,Dindigul ,Dinakaran ,
× RELATED விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை...