மக்கள் பார்வைக்காக 3 மணி நேரம் திறப்பு பார்வதிபுரம் மேம்பாலத்தில் திரண்ட பொதுமக்கள்

நாகர்கோவில், டிச.16:  நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் நேற்று மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் திரண்டு பார்வையிட்டனர்.குமரியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், மார்த்தாண்டத்தில் ₹200 கோடியிலும், பார்வதிபுரத்தில் ₹114 கோடியிலும் இரு மேம்பாலங்கள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நடப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.  பாலத்தின் கீழே அணுகு சாலைகள் சீரமைக்க வேண்டியது உள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த மாதம் 10ம் தேதி மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. அன்று ஏராளம் பொதுமக்கள் பாலத்தை பார்வையிட்டனர். இது போன்று பார்வதிபுரம் மேம்பாலத்தையும் மக்கள் பார்வையிடும் வகையில், நேற்று மக்கள் பார்வை தின விழா அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை 3 மணி முதல் மக்கள் பாலத்தை பார்வையிட நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் திரண்டனர். எம்.எஸ் (சென்னை சேலம் சாலை) சாலை,  கே.பி சாலை மற்றும் திருவனந்தபுரம் சாலையில்  பால முகப்பில் வரவேற்பு கூடாரம் அமைக்கப்பட்டு இனிப்பு மற்றும் ரோஜா பூக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒன்றிய பா.ஜ வாரியாக, மரக்கன்றுகள், விதைகள், பிஸ்கட், கேக், தண்ணீர் பாட்டில், பாப்கார்ன், பஜ்ஜி, சுக்குகாபி, கிழங்கு என உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இதுபோல் ஆங்காங்கே கிராமிய கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி, மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. மதம், கட்சி, இன பேதமின்றி ஏராளம் மக்கள் குடும்பத்தோடு திரண்டு பாலத்தை பார்வையிட்டனர். கல்லூரி மாணவ, மாணவியரும் பொதுமக்களும் பாலத்தை பார்வையிட்டதுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலை 6 மணிக்கு பாலத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.பொன்.ராதாகிருஷ்ணனுடன், மதசார்பற்ற ஜனதாதள மாநில தலைவர் முகமது இஸ்மாயில், பா.ஜ மாநில செயலாளர் தர்மராஜ், கோட்ட பொறுப்பாளர்கள் தர்மபுரம் கணேசன், மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், பொருளாளர் உடையார், முன்னாள் நகர் மன்ற தலைவி மீனாதேவ், துணைத் தலைவர் முத்துராமன் ஆகியோரும் பார்வையிட்டனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் மகேஷ், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பாலத்தை பார்வையிட்டனர்.

ஆண்டுதோறும் நடத்துவார்களா?

பாலத்தை பார்வையிட வந்த பலரும், நாகர்கோவிலில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. எனவே ஆண்டுதோறும், ஒரு நாள் போக்குவரத்தை மாற்றி இதுபோன்ற விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என்றனர்.

மார்தாண்டம் போல் இங்கும் பாலம் குறித்து மக்களிடம் யாரும் வதந்தியை கிளப்பி பீதியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் அதிகாரிகள் கண்காணித்தனர். இடையில், இளைஞர்கள் சிலர் பாலம் பற்றி ஜாலியாக கமென்ட் அடித்ததுடன், ஒரு வாலிபர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்றார். அவரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

துறைமுக பார்வை விழா

பாலத்தை பார்வையிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பாலம் கட்டும்போது, மக்கள் பட்ட கஷ்டங்கள், பாலம் திறந்த பின்னர் மாறிவிடும். மக்களும் புரிந்து கொள்வார்கள். குமரியில் துறைமுகம் வந்தே தீரும். இதனை குமரி வரும்போது பிரதமர் அறிவிப்பார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் துறைமுகத்தின அவசியம் அறிந்துள்ளதால் ஆதரிக்கின்றனர். துறைமுகம் அமைந்த பின்னர் இதுபோல்  மக்கள் கலந்து கொள்ளும் துறைமுக மக்கள் பார்வை விழா நடைபெறும் என்றார்.

19ம் தேதி முதல்வாகனங்கள் அனுமதி

மார்த்தாண்டம் பாலத்தில் 19ம் தேதியும், பார்வதிபுரம் பாலத்தில் 23ம் தேதியும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அணுகுசாலை பணிகள் முடிவடைந்து, பிரதமர் அளிக்கும் தேதியில் திறப்பு விழா நடைபெறும் என பா.ஜனதா நிர்வாகிகள் கூறினர்.

Related Stories:

>