×

மரக்காணத்தில் நவீன உப்பு அரவை தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை

மரக்காணம், நவ. 30:  மரக்காணம் பகுதியில், நவீன முறையிலான உப்பு அரவை தொழிற்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இதில் இருந்து ஆண்டுதோறும் 4 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு புதுவை, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் உப்பு அரவை தொழிற்சாலைகள் இல்லாததால் கல் உப்பாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ உப்பு ரூ.1.30 முதல் ரூ.1.70 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு பவுடராக அரைத்து, உப்பு உற்பத்தி செய்யப்படும் மரக்காணத்திலேயே ஒரு கிலோ உப்பு ரூ.12 முதல் ரூ.18 வரையில் விற்பனையாகிறது.

தற்போது பொது மக்களும் அதிகளவில் பவுடர் உப்புகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பவுடர் உப்புகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு நவீன உப்பு அரவை தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளை அரைத்து பவுடர் உப்புகளாக விற்பனை செய்ய முடியும். இதுபோல் விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான உப்பு கிடைக்கும். இதன் மூலம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் பயன் பெறுவர். எனவே, இப்பகுதியில் நவீன முறையிலான உப்பு அரவை தொழிற்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Marakana ,Modern Salt Array Factory ,
× RELATED மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட...