×

கெங்கவல்லியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய வாலிபர் கைது

கெங்கவல்லி, நவ.30: கெங்கவல்லி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கெங்கவல்லியையொட்டியுள்ள வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. அதனை இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் கெங்கவல்லி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடம்பூர் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் தலையில் டார்ச்லைட் கட்டியபடி சென்றதை கண்டு திடுக்கிட்டனர்.  உடனே, போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார்.  

தீவிர விசாரணையில், அவர் கூடமலை பேரூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் கண்ணன்(24) என்பதும், ரிக் வண்டியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியுடன் கடம்பூர் மலைப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதகா ஒப்புக்கொண்டார். எஸ்ஐ சிவசக்தி நடத்திய விசாரணையில், 74 கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(55) என்பவரிடம் 13 ஆயிரம் கொடுத்தது நாட்டு துப்பாக்கி வாங்கியதாகவும் கூறினார். ராஜேந்திரனை பிடித்து விசாரித்தபோது வலிப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக ராஜேந்திரனை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED டூவீலர் மீது பஸ் மோதி