×

தமிழகத்துக்கு பாதகமாக அண்டை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

நாகர்கோவில், நவ. 28: நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பரீட்சைக்கு பயமேன் புத்தகங்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாதுவில் புதிய அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வழங்கியுள்ள அனுமதி கடிதத்தில் என்ன வார்த்தைகள் உள்ளன என்பது எனக்கு தெரியவில்லை. அதை படித்து பார்த்த பின்னர்தான் கருத்து கூற முடியும். இருப்பினும் தமிழகத்துக்கு பாதகமாக அண்டை மாநிலங்கள் அணை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக கர்நாடக மாநிலத்துக்கு இது பொருந்தும். ஓய்வு பெற்றபின் தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாக ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். எனவே, அவர் ஓய்வு பெற்றபின் எந்த பாதிப்பும் வராது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நான் 3 முறை ஆய்வு செய்துள்ளேன். மத்திய குழுவும் ஆய்வு நடத்தி உள்ளது. மத்திய அமைச்சர்களும் துறைவாரியாக தமிழக அரசை தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மர்ம நபர்கள் குறித்து விசாரணை: தொடர்ந்து தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த  புத்தகம் வழங்கும் விழாவில் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி  மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடல் வழி மார்க்கமாக சில மர்ம  நபர்கள்  கன்னியாகுமரியில் அமைய இருக்கின்ற வர்த்தக துறைமுக இடத்தினை  புகைப்படம் எடுப்பதற்காகவும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை  தொகுத்து எடுப்பதற்காகவும் கன்னியாகுமரி வந்துள்ளதாகவும், சீனா மற்றும்  இலங்கை நாடுகள் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது தங்களுக்கு  ஆபத்து என்று கருதுகின்ற நிலையில் கன்யாகுமரியில் அந்த நபர்கள் தங்கி  இருந்ததாகவும் தற்போது அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறை பூட்டி  இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே  அவர்கள் யார் துணையுடன், வந்தார்கள்  என்றும் விசாரிக்க வேண்டும் என்றார்.

Tags : Neighbors ,dam ,Radhakrishnan ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்