×

திருவண்ணாமலையில் மலையேற தற்காலிக அனுமதி ரத்து தடையை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

திருவண்ணாமலை, நவ.28: திருவண்ணாமலை மலைமீது ஏறுவதற்கான தற்காலிக அனுமதி நேற்றுடன் முடிந்தது. தடையை மீறி மலையேறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடும் தீபமலையின் மீது, பக்தர்கள் செல்வதற்கு ஏற்கனவே நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருவடிவமாக மலை அமைந்திருப்பதாலும், மலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டது.

அதேபோல், கிரிவல மலையின் மொத்த பரப்பளவில் 699.3 ஹெக்டர் வனத்துறையின் பராமரிப்பிலும், 234 ஹெக்டர் வருவாய்த்துறை பராமரிப்பிலும் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மலைக்கு செல்லும் அனைத்து ஒற்றையடி வழிப்பாதைகளையும் முள்வேலி அமைந்து வனத்துறையினர் தடை செய்துள்ளனர். உள்வட்ட பாதையில் கிரிவலம் செல்வதையும் தடை செய்துள்ளனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி மகா தீபத்தை தரிசிக்க மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, முதல் நாளன்று 2,500 பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் வரும் 3ம் தேதி வரை காட்சியளிக்கும். எனவே, கடந்த 4 நாட்களாக பக்தர்கள் மலைக்கு சென்று நெய் காணிக்கை செலுத்தவும், தீபத்தை தரிசிக்கவும் விரும்புகின்றனர். விரத மாலை அணிந்த பக்தர்களின் விருப்பத்துக்காக, கடந்த நான்கு நாட்களாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டும் மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் மலைக்கு செல்லும் தற்காலிக அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும், மலையின் பல்வேறு பகுதிகளில் வன காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் கூறுகையில், ‘திபத்திருவிழாவை முன்னிட்டு மலைஏற தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. திருவிழா முடிந்த நிலையில் மலைமீது செல்ல இனி அனுமதியில்லை. எனவே, இனிமேல் மலைமீது செல்லும் நபர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் அனுமதியின்றி மலைக்கு சென்றவர்கள் மற்றும் வெளிநாட்டினரை மலைக்கு அழைத்து சென்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அதிகபட்சம் ₹25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனவே, மலையேறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Tags : treachery ,violation ,Tiruvannamalai ,permit cancellation ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...