×

மது அருந்தும் இடமாக மாறிய தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம்

திருக்கோவிலூர், நவ. 27: திருக்கோவிலூர் அருகே உள்ள தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தில் மின் வசதி இல்லாததால் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் இருந்து அரகண்டநல்லூர் செல்லும் சாலையில் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும்போது அந்த  தண்ணீர் தரைப்பாலத்தின் மேலே செல்லும். சில நாட்களை தவிர மற்ற நாட்களில் பொதுமக்களின் போக்குவரத்தும், வாகன போக்குவரத்தும் இங்கு நடக்கும். அதே நேரத்தில் இந்த தரைப்பாலம் பழைய கடலூர்- சித்தூர் சாலையில் அமைந்துள்ளது. கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், அரிசி ஆலைகளுக்கு விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் மாட்டுவண்டிகள் என அனைத்து வாகனங்களும் இந்த தரைப்பாலத்தின் வழியாக செல்கின்றன. இந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் வசதிக்காக திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பேரூராட்சி சார்பில் அங்குள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனத்தில் செல்பவர்களும் அச்சமின்றி சென்று வந்தனர்.

தற்போது இந்த தரைப்பாலத்தில் ஒரு கம்பங்களில் கூட மின்விளக்கு வசதி இல்லாததால் அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் வருபவர்களும் அச்சத்தில் செல்கின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. பல நேரங்களில் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து விட்டு பணம் மற்றும் கோணிப்பை ஆகியவற்றை சுமந்து கொண்டு இவ்வழியாக தான் வருகின்றனர். ஆனால் இருள் சூழ்ந்த பகுதியில் வரும்போது அவர்களின் உடமைகளுக்கோ அல்லது உயிருக்கோ அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் தரைப்பாலத்திலும், தரைப்பாலத்தின் அருகாமையிலும் மது அருந்தி வருகின்றனர். இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : riverbank ,land ,
× RELATED கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற...