பெருந்துறை, நவ. 22: சென்னிமலை அருகே விதிமீறி வணிக ரீதியாக பயன்படுத்திய டிராக்டரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னிமலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சொந்த உபயோகத்திற்காக டிராக்டர் வாங்கியுள்ளார். பின்னர் அந்த டிராக்டரில், விதியை மீறி தண்ணீர் டேங்கர் ஒன்றை இணைத்து, அதன் மூலம் சென்னிமலை பகுதியில் தண்ணீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். இது குறித்து பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொடுத்த புகாரின் பேரில், வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி மற்றும் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சென்னிமலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ரமேஷ்குமாரின் டிராக்டர் தண்ணீர் டேங்கருடன் விற்பனைக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்ததில், அந்த டிராக்டருக்கு கடந்த 2 ஆண்டாக சாலை வரி கட்டாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டருக்கு ரூ.6 ஆயிரம் சாலை வரியும், ரூ.5 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை டிராக்டர் உரிமையாளர் கட்டத்தவறியதால், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.