×

பண்ருட்டி காவல் நிலையத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பண்ருட்டி, நவ. 13: பண்ருட்டி காவல்நிலையத்தை துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பகுதியில் நேற்று காலை துப்புரவு தொழிலாளர்கள் வழக்கம்போல் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜாஜி சாலையில் ஒரு வாகனத்தில் குப்பைகளை அள்ளிக்கொண்டு, காந்தி சிலை நோக்கி துப்புரவு தொழிலாளர்கள் சென்றனர். அப்போது நான்குமுனை சந்திப்பில் இடது பக்கமாக ஒரு கார் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிரே வீட்டில் இருந்து காவல்நிலையம் நோக்கி பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா ஸ்கூட்டரில் வந்தார்.

சாலையில் இடம் இல்லாததால் காருக்கும், துப்புரவு வாகனத்துக்கும் இடையில் புகுந்த அவர், ஸ்கூட்டரை நிறுத்தி ஏன் எனக்கு வழிவிடவில்லை என கேட்டு தகராறு செய்தார். தொடர்ந்து அவர், திருவதிகை எம்ஜிஆர் நகரை சேர்ந்த டிரைவர் பழனியை ஒருமையில் பேசி, குடிபோதையில் வண்டி ஓட்டுகிறாயா எனக் கூறி காவல்நிலையம் அழைத்து சென்று ரூ.100 அபராதம் விதித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மற்ற துப்புரவு தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்ட துப்புரவு வாகனங்களுடன் வந்து பண்ருட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஒருவழிப்பாதையில் விதிகளை மீறி சப்-இன்ஸ்பெக்டர் எதிர் திசையில் வந்துள்ளார். ஆனால் துப்புரவு வண்டி டிரைவருக்கு அபராதம் விதித்துள்ளார் எனக் கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் இருதரப்பினருக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் அனைவரும் மற்ற பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்காக வேண்டி அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Cleaner Strike ,Panthuti Police Station ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது