×

கஞ்சா விற்பனை ஒழிக்கப்படும் புதிய துணைக்கமிஷனர் உறுதி

கோவை, நவ.8:  கோவை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவின் புதிய போலீஸ் துணைக்கமிஷனராக பாலாஜி சரவணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
 கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் லட்சுமி. இவர், லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.யாக சென்னைக்கு பணியிடம் மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக, ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பாலாஜி சரவணன், எஸ்.பியாக பதவி உயர்வுபெற்று கோவை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
 இவர், கோவையில் உதவி கமிஷனராகவும், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணைக்கமிஷனர் பாலாஜி சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் விற்பனையை தடுக்க ஏற்கனவே தனிப்படை அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏராளமான கஞ்சா வியாபாரிகளை கைது செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.  கஞ்சா பழக்கத்தால் மாணவர்களின் படிப்பு பாழாகி வருவதால் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தொடர்ந்து இச்செயலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
மாநகரில் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவில் தீர்வுகாணப்படும். நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். தற்போது உள்ளது போல் சட்டம்- ஒழுங்கு தொடர்ந்து பேணி பாதுகாக்கப்படும். இவ்வாறு துணைக்கமிஷனர் பாலாஜி சரவணன் கூறினார்.

Tags : subcommittee ,
× RELATED பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம்...