×

பறவைகளை வேட்டையாடிய வாலிபர் கைது

மரக்காணம், நவ. 2: மரக்காணம் பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பக்கிங்காம் கால்வாய் பகுதி அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் நீர் நிரம்பி இருக்கும். இங்கு பருவகால மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக ஆண்டுதோறும் சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு வகையிலான சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகிறது. இதனால் இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சமூக விரோதிகள் உணவுக்காக வேட்டையாடுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை மரக்காணம் அருகே ஜகநாதபுரம் வயல்வெளி பகுதியில் ஒருவர் வலை விரித்து பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திண்டிவனம் வனச்சரக அலுவலர் பெரியண்ணன், வனவர் முரளிகிருஷ்ணன், வனக்காப்பாளர்கள் தர்மன், ஏழுமலை, ராகவன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பறவைகளை வேட்டையாடிய ஒரு வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்து வெள்ளை கொக்குகள் மற்றும் பறவைகளை பிடிக்கும் வலையையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மரக்காணம் அருகே உள்ள கோமுட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கார்த்தி(18) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை கைது செய்து, பறவைகளை வேட்டையாடியதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : hunter ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’