×

மேம்பாலம் பகுதியில் பிரிவு சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, நவ. 2: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்களை ஒட்டிச் செல்பவர்களும், வாகனத்தில் பயணம் செய்பவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அச்சத்துடன் சென்று வரும் நிலையிலேயே உள்ளனர். உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் நடைபெற்று வரும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உயிரிழந்தும், படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
காவல்துறையின் சார்பில் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக விபத்துகள் நடைபெறும் இடத்தில் பேரிகார்டுகள், விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள் என வைத்தும், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் இந்த சாலை விபத்துகளை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இது மட்டுமின்றி உளுந்தூர்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசூர், மடப்பட்டு, கெடிலம், சேந்தமங்கலம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பாதூர், செங்குறிச்சி, நகர் மன்னார்குடி, அஜீஸ்நகர், பாலி, ஷேக்உசேன்பேட்டை, ஆசனூர், எறஞ்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் தான் அதிக அளவு சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது.இந்த இடங்களில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க மின்கம்பங்கள் நடப்பட்டும், இதுவரையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கடந்த மாதம் கூட லாரி மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் கருகி உயிரிழந்த இடமான எடைக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட அஜீஸ்நகர் மேம்பாலம் அருகில் பாலத்தின் பக்கவாட்டில் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு பிரிவு சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகாலமாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக பிரிவு சாலை அமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கப்படவில்லை. இதனால் அஜீஸ்நகர் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அஜீஸ்நகர் பகுதியில் பிரிவு சாலை அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை  
எழுந்துள்ளது.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி