×

15வது மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க முடியும்

புதுச்சேரி, நவ. 1: இந்திய கம்யூ., தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான அஜிஸ் பாஷா புதுவையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ரபேல் ஊழல், சிபிஐ அதிகாரிகள் இடையே அதிகாரப்போட்டி, ரிசர்வ் வங்கி- மத்திய அரசு இடையே மோதல் ஆகியன 5 மாநில தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் குறைந்த ஆட்சி, அதிக நிர்வாகம் இருக்கும் என கூறினார். ஆனால் இப்போது வெறும் ஆட்சி மட்டும் தான் உள்ளது, நிர்வாகம் இல்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசில் அதிகாரமிக்க பதவிகளில் வைப்பதிலேயே மோடி குறியாக இருக்கிறார். ரபேல் விவகாரத்தில் அமைச்சரே பாராளுமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கின்றார். தனியார் நிறுவனங்களின் 9.6 லட்சம் கோடி வராக்கடன் இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகளை பாஜக, ஆர்எஸ்எஸ் நெருக்கமான நிறுவனங்களுக்கு கடன் வழங்க மோடி அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் 21 பொதுத்துறை வங்கிகளில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்வதற்கும் நெருக்கடி கொடுக்கிறது.
புதுவையில் இரட்டை ஆட்சி நடக்கிறது. முதல்வர், கவர்னரில் யார் உத்தரவை செயல்படுத்துவது என அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கவர்னர், அதிகாரிகளை அழைத்து மிரட்டுகிறார். புதுவைக்கு இணையாக மக்கள் தொகை கொண்ட அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் முழு மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதேபோல் புதுவைக்கும் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதில் கவர்னர் தனது கருத்தை தெரியபடுத்த வேண்டும். மாநில அந்தஸ்து பெறும்போது தான் 15வது மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க முடியும். கவர்னர் கிரண்பேடி ஐபிஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டவர். ஆனால் தற்போது மத்திய மோடி அரசின் முகவராக செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Central Finance Committee ,
× RELATED புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்