×

புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்

புதுச்சேரி, டிச. 1: கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த மாநில நிதியமைச்சர்கள் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் மருத்துவமனையில் இருந்தவாறு முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். அப்போது அவர், புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வலியுறுத்தி பேசினார். சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியதால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்பீடு தொகை மற்றும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தும் விதமாக மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) கூட்டத்துக்கு கேரளா மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. நேற்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்த காணொலிக்காட்சி கூட்டத்தில் கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

புதுச்சேரியில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி சென்னை மருத்துவமனையில் மூட்டுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் பூரண ஓய்வில் இருக்கிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமும் ஜிஎஸ்டி நெருக்கடியினை சந்தித்து வருகிறது. ஆகையால், இக்கூட்டத்தில் பங்கேற்பது இன்றியமையாதது என்பதால் மருத்துவமனையில் இருந்தவாரே முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது, அவர் புதுச்சேரி மாநிலத்துக்கான நிதி உரிமையை மத்திய அரசு தர வேண்டும், மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில ஜிஎஸ்டி ஆணையர் குமார் உடனிருந்தார்.

Tags : Puducherry State ,Central Finance Committee ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்...