×

ஆயக்குடி விவசாய பகுதிக்கு செல்லும் மினிபஸ்கள் ‘கட்’ தொழிலாளர்கள் அவதி

பழநி, அக். 31:    கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக ஆயக்குடி அருகே வரதாபட்டிணம், சட்டப்பாறை, பொன்னிமலைசித்தன் கரடு, ஒத்தக்கடை, இரட்டைமறுகால், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் தீவிரமடைந்துள்ளன. இப்பகுதியின் விவசாயத்திற்கு ஆயக்குடியில் இருந்து மினிபஸ்கள் மூலம் மட்டுமே செல்ல முடியும். அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. கடந்த 2 வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலவியது. இதன்காரணமாக விவசாய தொழிலாளர்கள் இப்பகுதிக்கு அதிகளவில் செல்லாமல் இருந்து வந்தனர். இதனால் மினிபஸ்கள் சரிவர செல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது விவசாயப்பணிகள் துவங்கியதால் ஏராளமானோர் இப்பகுதிக்கு சென்று வருகின்றனர். ஆனால் மினிபஸ்கள் இயக்கப்படாததால் சுமார் 4 கிமீ தூரம் அளவிற்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் விவசாய தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆயக்குடியைச் சேர்ந்த மெர்சி கூறியதாவது,  ‘‘விவசாயப்பணிகள் துவங்கி உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் விவசாய கூலிக்கு சென்று வருகின்றனர். இயக்கப்பட்டு வந்த 4 மினிபஸ்களும் தற்போது இவ்வழித்தடத்தில் இயங்குவதில்லை. இதனால் மினிடோர் வாகனங்களில் பலர் ஒன்றாக சேர்ந்து பணம் செலுத்தி வேலைக்கு சென்று வருகிறோம். வேலை முடிந்து திரும்பும்போது வாகனங்கள் கிடைக்காது. நடந்துதான் வரவேண்டி உள்ளது. இதனால் வீடு திரும்ப இரவாகி விடுகிறது. எனவே, விவசாய தொழிலாளர்களின் நலன்கருதி மினிபஸ்கள் இயங்காத வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Minibuses ,area ,Akkukudi ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...