×

சங்கரன்கோவில், தென்காசி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்

சங்கரன்கோவில், அக். 26: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம், நேற்று நடந்தது. காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, கொடிபட்டம் வீதியுலா, சங்கரலிங்கசுவாமி அனுக்ஞை அங்கூரம் நிகழ்ச்சி நடந்தது. காலை 5.48 மணிக்கு கோமதிஅம்பாள் சன்னதியில் உள்ள  தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்பாள் வீதியுலா, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம், நவ.4ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் தெற்குரதவீதி அருகே உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளலும், மண்டகப்படியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கிறது.

மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் தேரடி அருகே கோமதிஅம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், இரவில் மணப்பெண் அலங்காரத்தில் கோமதிஅம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணி முதல் 10 மணிக்குள் சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவ.5ம் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பட்டினப்பிரவேச வீதியுலா நடக்கிறது. இதேபோல் தென்காசி உலகம்மன் உடனாய காசி விசுவநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை கைலாச பட்டர், முத்துக்கிருஷ்ணன் பட்டர், செந்தில் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் கோயில் மணியம் செந்தில்குமார், கணக்கர் மேலகரம் பாலு, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், கூட்டுறவு மாரிமுத்து, சுப்புராஜ், ஆவுடையப்பன், ஹரி, முன்னாள் கவுன்சிலர் இசக்கி,

பிஎஸ்என்எல் செல்லப்பா, மணி மற்றும் கட்டளைதாரர்கள் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா, தினமும் மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நவ.2ம் தேதி காலை 8.20 மணிக்கு மேல் நடக்கிறது. 4ம் தேதி காலை 8.20 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல், மாலை 6.05 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசுக்காட்சி கொடுத்தல், இரவில் 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் அனைத்து கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Sankarankovil ,temples ,Tenkasi ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்