×

கெங்கவல்லியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான தொங்கல் பயணம்

கெங்கவல்லி, அக்.26:  கெங்கவல்லியில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு போதிய பஸ் வசதியில்லாததால், கிடைக்கும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில்  6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 900 மாணவர்கள், 800 மாணவிகள், படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளில் 60 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலமே அவர்கள் வந்து செல்கின்றனர்.

காலை 8 மணி முதல் 9 மணிக்குள் பள்ளிக்கு வருவதற்கு போதுமான அரசு பஸ்கள் இல்லை. கூடமலை, கடம்பூர், கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கு ஒரு அரசு பஸ் மட்டுமே வந்து செல்கிறது. இந்த பஸ்யில் தான் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகின்றனர். 60 பேர் பயணிக்க வேண்டிய சூழலில், 100க்கும் மேலானோரை அடைத்துக் கொண்டு பஸ் வருகிறது. மாணவர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி வரும் சூழ்நிலை காணப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, காலை மற்றும் மாலை வேளையில் தம்மம்பட்டி மற்றும் வீரகனூர் ஆகிய ஊர்களில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என பெற்றோரும், மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kenkavalli ,bus stand ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...