×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

திருவெண்ணெய்நல்லூர், அக். 23:  திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேந்திரன்(30). அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் பொன்மலர்(27). இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பொன்மலர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் அவரின் கணவர் வீட்டில் வளைகாப்பு நடத்தியுள்ளனர். இதற்காக அலங்கார பந்தல், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை பொன்மலர் வீட்டின் வாசலில் உள்ள குப்பைகளை பெருக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் பொன்மலர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி செய்வதற்கு மருத்துவர், செவிலியர்கள் யாரும் இல்லை. உறவினர்கள் அங்குள்ள துப்புரவு பணியாளர்களிடம் கேட்டதற்கு இரவு பணி செய்யும் செவிலியர் பணிக்கு வந்து விட்டு அதிகாலையே சென்று விட்டதாக கூறியுள்ளனர். சுமார் 2மணி நேரமாக காத்திருந்த பொன்மலர் மற்றும் அவரின் உறவினர்கள் மருத்துவர், செவிலியர் யாரும் வராததால் ஆத்திரமடைந்து சுகாதார நிலையத்தின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதே ஊரில் உள்ள கிராம செவிலியர் செல்வி சுகாதார நிலையத்திற்கு சென்று ஆம்புலன்சை வரவழைத்து மின்சாரம் தாக்கிய கர்ப்பிணி பெண்ணை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Doctor ,nurse ,Thiruvannai Nellore ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...