×

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாளை நவராத்திரி பரிவேட்டை

கன்னியாகுமரி, அக். 18: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவினை  முன்னிட்டு நாளை (19ம் தேதி) அம்பாள் பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நடக்கிறது.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா கடந்த 10ம் தேதி அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.விழா நாட்களில், தினமும் காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அம்மன் வாகனத்தில் பவனி வருதல்,  சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பரிவேட்டை: நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சியில், அம்மனுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிப்பார்கள். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்கும். ஊர்வலத்தில் பஜனை, யானைகள், குதிரைகள் ஊர்வலம், பெண்களின் முத்துக்குடை அணிவகுப்பு, கரகாட்டம், தையம் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் மேள தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் அம்மன் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம் வழியாக மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு பாணாசூரனை அம்மன் அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நடக்கிறது. தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோயிலை சென்றடைந்து, பின்னர் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடக்கிறது. இதன் பின்னர் அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிக்கிறார்.விழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோயில் மேலாளர் சிவராமசந்திரன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Navarathri Parivarti ,Kanyakumari Bhagavathyamman ,
× RELATED கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ₹18 லட்சத்து 57 ஆயிரம் காணிக்கை