×

சிவாயம் வில்கல்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலம்-வெற்றி பெற்ற மாடுகளுக்கு தேவராட்டத்துடன் மரியாதை

தோகைமலை : அய்யர்மலை அருகே உள்ள சிவாயம் வில்கல்பட்டியில் நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு தேவராட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே உள்ள சிவாயம் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட வில்கல்பட்டியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 9 நாள் விரதம் இருந்து மாரியம்மனுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் மாரியம்மனுக்கு கரகம் பாலித்து தாரை, தப்பட்டை உருமி மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் வீதி உலா வந்து கோயிலில் குடிபுகுந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 ம் நாள் அன்று மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று 3 ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாடு மாலை தாண்டும் திருவிழா நடந்தது.இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 14 மந்தையர்கள் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மந்தையர்களை வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாரியம்மன் கோயில் முன்பாக அனைத்து மந்தைகளின் எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தாரை, தப்பட்டை, உருமி முழங்க கோயில் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு எருதுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள எல்லைசாமி கோயிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து எல்லை கோட்டை நோக்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் அய்யம்பாளையத்தை சேர்ந்த மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை முதலாவதாக ஓடி வந்த சலை எருது மாடு மீது தூவி வரவேற்று எலும்பிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனின் கரகத்தை மஞ்சள் நீராட்டுடன் வீதி உலாக எடுத்து சென்று சாமிக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Shivayam Vilkalpatti Cow Jumping Festival Kolakalam ,Devaratam , Thokaimalai: The Madu Mala Tandum festival held at Shivayam Vilkalpatti near Aiyarmalai was held in full swing.
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...