×

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம்

* 31ம் தேதி முதல் அமலாகிறது

* காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது.  
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நிலவும் வாகன போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் அவர்களது கருத்தின் அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஒப்புதல் பெறப்பட்டு வருகிற 31ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.

அதன்படி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சங்கராபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி நகர பேருந்துநிலையத்திற்கு ஏமப்பேர் பைபாஸ் வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டு நேராக சென்னை புறவழிச் சாலையில் சென்று சாமியார் மடம் வழியாக இடது புறம் வளைந்து ஏகேடி பள்ளி சாலை வழியாக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், சங்கராபுரம் மற்றும் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும்.

மேலும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் நான்குமுனை சந்திப்பை கடந்து அண்ணா நகர், ஏமப்பேர் புறவழிச்சாலை வழியாக வெளியேற வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.    

மேலும் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் வழக்கமான பாதையிலேயே செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு கள்ளக்குறிச்சி நகர பொதுமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள், பயணிகள் அனைவரும் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Kallakurichi , Kallakurichi: The police have converted the main road into a one-way lane to reduce traffic congestion in Kallakurichi town
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...