×

காஞ்சிபுரம் குருவிமலை வெடி விபத்தில் 10 பேர் சாவு பட்டாசு ஆலைக்கு சீல் வைப்பு: கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் அடுத்தத குருவிமலை பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, பட்டாசு ஆலைக்கு சீல் வைக்க கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில், `நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன் (எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பெறுப்பிலும், காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இயக்குநராகவும் உள்ளார். இந்நிலையில், அவர் நடத்தி வரும் குருவிமலை பட்டாசு ஆலையில், 30க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை 27 பணியாளர்கள் பணிக்கு வந்தனர்.

அப்போது, பட்டாசு தயாரிக்கும் குடோன் முன் பட்டாசு தயாரிக்கும் மூலைப் பொருட்களை வெயிலில் காய வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. 10 பேர் இந்த விபத்தில் பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயம் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார், இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரன், மேலாளர் மணிகண்டன், நரேந்திரனின் சகோதரி மகன் சுதர்சன் (தீ விபத்தில் இறந்தவர்) ஆகிய 3 பேர் மீது வெடிபொருள்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில், பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 3 வெடிபொருள் தயாரிக்கும் குடோன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் தனியார் வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியானதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முசரவாக்கம், சுருட்டல், மானாமதி  பகுதிகளில் இயங்கி வரும் மூன்று வெடிபொருள் தயாரிக்கும் குடோன்களுக்கு தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், குடோனில் உள்ள வெடிபொருள்கள், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுதல் போன்ற ஆய்வு செய்தபின் பணி தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் நடந்த பயங்கர பட்டாசு வெடி விபத்து தொடர்பாக, காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை மற்றும் வளத்தோட்டம் உள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

* பட்டாசு ஆலை வெடி விபத்து மகனை இழந்து தவிக்கும் தாய்
காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனின் சகோதரி மகன் சுதர்சன். இறந்த சுதர்சனுக்கு திருமணமாகி 6 மாதங்கள் தான் ஆகிறது. அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனின் சகோதரி கணவனை இழந்தவர் இவருக்கு, ஆறுதலாக அவரது மகன் சுதர்சன் மட்டுமே இருந்தார். தற்போது, அவரும் இந்த பயங்கர தீ விபத்தில் இறந்து விட்டதால் அவரது தாய் தவித்து வருகிறார். தந்தை இறப்பால் மகள் திருமணம் நின்ற சோகம்பட்டாசு ஆலையில் வேலை செய்யும் காஞ்சிபுரம் பல்லவன்நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (53). இவர். தனது மகளின் திருமணத்திற்காக, பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனிடம் பணம் கேட்க சென்றுள்ளார். அப்போது, பூபதியும் இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி இறந்துள்ளார். பூபதியின் மகளின் திருமணம் நேற்று நடைபெற இருந்த நிலையில், தற்போது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே 2017ல் நடந்த தீ விபத்தில் இருந்து பூபதி உயிர் தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Kanchipuram ,Kuruvimalai ,Aarti , Kanchipuram Kuruvimalai explosion kills 10 Firecracker factory sealed: Collector Aarti orders action
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...