×

ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி:  ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆங்கிலேயர்  ஆட்சி காலத்தின் போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன்  என்பவரால் கடந்த 1819ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.  1819ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஊட்டியை வந்தடைந்த ஜான் சல்லிவன்  ஒரு கல் வீட்டையும் கட்டினார். நீலகிரியின் முதல் கட்டிடமான இந்த கல்வீடு  இன்றளவும் ஊட்டி அரசு கலை கல்லூரியில் உள்ளது. அதன் பிறகு இப்பகுதியை கோடை  இருப்பிடமாக மாற்ற எண்ணி இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை  உருவாக்கினார்.

பின்னர் ஐரோப்பிய, ெதன்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல  வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மர வகைகளை இறக்குமதி செய்து நீலகிரி  மாவட்டத்தில் நடவு செய்தார். ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய  ஏரியையும் உருவாக்கினார். இதன் காரணமாக ஊட்டியில் ஐரோப்பிய பாணியிலான  பழைமையான கட்டிடங்கள், நினைவிடங்கள், பூங்காக்கள் உள்ளன. இவற்றை ஊட்டி  வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

தற்போது  ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வரும் நிலையில் இதனை கொண்டாட வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஊட்டியில் உள்ள சுற்றுலா  தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்றவற்றிலும்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காண முடிகிறது. இந்நிலையில் ஐரோப்பிய  நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இருந்து 24 பேர் கொண்ட சுற்றுலா  பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள தேயிலை  தோட்டங்களையும், பழங்குடியின கிராமங்களுக்கு சென்று பார்த்து மகிழ்ந்து  வருகின்றனர்.

குறிப்பாக தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற அவர்கள்,  அவர்களின் பாரம்பரிய எம்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகளை வாங்கி சென்றனர்.  மேலும் அவர்களின் கலாசாரம் குறித்து் கேட்டறிந்தனர். பின்னர் அவர்களுடன்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஊட்டியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட புனித  ஸ்டீபன் தேவாலயம் உள்ளிட்ட பழைமை வாய்ந்த தேவாலயங்களையும் பார்வையிட்டனர்.  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், அவர்களை பல்வேறு சுற்றுலா  தலங்களுக்கு அழைத்து செல்லும் பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Ooty , The mild climate prevailing in Ooty, the foreign tourist,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...