வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மிக அதிகபட்சமாக குடியாத்தத்தில் 52 மி.மீ மழை பதிவானது. தமிழகத்தில் பரவலாக தற்போது கோடை மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் காலநிலை சற்று மந்தமாக காணப்பட்ட நிலையில் நேற்று பகலில் வெயில் தகித்தது. இந்த நிலையில் இரவில் திடீரென மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது.
மாவட்ட தலைநகரான வேலூரில் லேசான காற்றுடன் நள்ளிரவு மிதமான மழை பெய்தது. நகரின் சுற்றுப்புறங்களான பாகாயம், காட்பாடி, அரியூர், கணியம்பாடி, பொன்னை, மேல்பாடி, வள்ளிமலை பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
அதேநேரத்தில் ேக.வி.குப்பம், லத்தேரி, பனமடங்கி, பரதராமி பகுதிகளிலும், ஒடுகத்தூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. பரதராமி பகுதியில் பல இடங்களில் வீட்டின் ஓலை மற்றும் சிமென்ட் கூரைகள் காற்றில் பறந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல் குடியாத்தம் நகரம், சுற்றுப்புற கிராம பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை அதிகாலை வரை பெய்தது. குறிப்பாக குடியாத்தம் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. அதேநேரத்தில் பேரணாம்பட்டு நகரம் மற்றும் வட்டாரத்தில் லேசான மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் மாவட்டத்தில் பரவலாக மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் காற்று மழையின் காரணமாக பரதராமி பகுதியில் மாடு ஒன்று பலியானது. குடியாத்தம், பரதராமி பகுதிகளில் பகுதியாகவும், முழுமையாகவும் மொத்தம் 3 வீடுகள் சேதமாயின. மேலும், அப்துல்லாபுரம், தார்வழி, கே.வி.குப்பம் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பல இடங்களில் கதிர் முற்றிய நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக குடியாத்தத்தில் 52 மி.மீ மழை பதிவானது. மிககுறைந்த அளவாக பேரணாம்பட்டில் 1.5 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 214.90 மி.மீ. சராசரி மழை அளவு 23.88 மி.மீ. பகுதி வாரியாக பதிவான மழை அளவு மில்லி மீட்டரில்: வேலூர் 21.80, குடியாத்தம் 52, மேலாலத்தூர் 32.80, காட்பாடி 21, திருவலம் 23.60, பொன்னை 19.20, பேரணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43.