×

ஒரே நாடு ஒரே கட்சியாக மாற்ற முயற்சி: அழிவுப் பாதையை நோக்கி ஜனநாயகம்.! சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அடக்கப்படும் எதிர்ப்பு குரல்கள்

மக்களால் மக்களுக்காக ஆட்சி நடக்கும் நாடுகளையே ஜனநாயக நாடு என போற்றுகிறோம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியா கொண்டுள்ளது. இந்த பெருமை மெல்ல, மெல்ல அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் ஜனநாயக விரும்பிகளின் தற்போதைய வேதனையாக உள்ளது. ஒன்றிய பாஜ ஆட்சியின் கீழ் நீதித்துறை, ஊடகம், தேர்தல் ஆணையம் என அனைத்து சுதந்திர அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டுப்படுத்த முயற்சி நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். அதேபோல, 2024 மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்ப்பு குரல்களை அடக்க தீவிரமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த பணிகளில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் செவ்வனே செயல்பட்டு வருகின்றன. சமீபகாலமாக அமலாக்கத்துறை ரெய்டு நடக்காத நாட்களே இல்லை. இதில் பெரும்பாலும் குறி வைக்கப்படுவது எதிர்க்கட்சி தலைவர்களாகத்தான் இருக்கின்றனர். கடந்த 2014ல் 8 ஆண்டுகளில் பாஜ ஆட்சியில் 121 முக்கிய அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.

இதில் 115 பேர், அதாவது 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சி தலைவர்கள் என்கிறது புள்ளிவிவரங்கள். காங்கிரசே இல்லாத நாடு வேண்டும் என முதலில் குரல் எழுப்பிய பாஜ, இப்போது எந்த ஒரு எதிர்க்கட்சி இருப்பதையும் விரும்பவில்லை. அதனால் பாரபட்சம் பார்க்காமல் எதிர்க்கட்சிகளை சூறையாடி வருகிறது. எந்த கட்சி எதிர்த்தாலும், பணியாவிட்டாலும் உடனே அமலாக்கத்துறை விசாரணை தான். டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. டெல்லியை தொடர்ந்து, பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்தது. அடுத்ததாக குஜராத்தில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்ததும், டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரத்தை சிபிஐயும், அமலாக்கத்துறையும் தீவிரப்படுத்தின. இதில், கெஜ்ரிவாலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலம், ஊழல் கறை படியாத கட்சி என்ற ஆம் ஆத்மிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்), பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயல்கிறார். இவருக்கு ஆதரவாக ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணியால் மக்களவை தேர்தலில் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக, கேசிஆர் மகளும் தெலங்கானா எம்எல்சியுமான கவிதாவை டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், பாஜவை கழற்றிவிட்டு மீண்டும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அந்த கோபத்தில் லாலு குடும்பத்தினருக்கு எதிரான ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கை அமலாக்கத்துறை தூசு தட்டி எடுத்துள்ளது. 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி, லாலு குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

2014ம் ஆண்டு பாஜ ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே எதிர்க்கட்சிகளால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் என கடந்த சில ஆண்டுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளின் விசாரணைக்கு ஆளான அரசியல் தலைவர்களின் பட்டியல் ஏராளம். சமீபத்தில், பிபிசி இங்கிலாந்து ஊடகம், 2002 குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்டதை தொடர்ந்து, டெல்லி, மும்பையில் உள்ள அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்காக ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இது, எந்த ஒரு எதிர்ப்பு குரலும் எழுப்பப்படுவதை பாஜ அரசு விரும்பவில்லை என்பதை உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு மாநிலத்திலும் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அங்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை எதிர்க்கட்சிகளை குறிவைத்து களத்தில் இறங்கி விடுகின்றன.

‘தேர்தல் வரும் பின்னே, அமலாக்கத்துறை வரும் முன்னே’ என்பதுதான் பாஜவின் புதுமொழியாக மாறி விட்டது. இதனால், ‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் சூறையாட பாஜ முயற்சிக்கிறதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்பதை பின்பற்றி வரும் பாஜ அரசு, ‘ஒரே நாடு, ஒரே கட்சி’ என்பதையே விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் என்பவை பல்லு பிடுங்கிய பாம்புகளாக இருக்க வேண்டும். எதிர்த்து கேள்வி எழுப்பாமல் இருக்க வேண்டும் என பாஜ திட்டமிட்டு வேலைகளை செய்கிறது. அதற்கு, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அரசமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது’’ என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘பாஜ அரசின் மீது அடுக்கடுக்காக எழுந்துவரும் இமாலய குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த கைது நடவடிக்கையை ஆளும் தரப்பு எடுத்து வருகிறது’ என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : CBI , Attempt to convert one country into one party: Democracy on the road to destruction. Voices of dissent suppressed by CBI, enforcement
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...