×
Saravana Stores

குழந்தைகளின் முதுகுத்தண்டில் பக்கவாட்டு வளைவு உள்ளதா? ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம், மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத்தண்டில் ஏற்படும் ஒரு பக்கவாட்டு வளைவு ஆகும். பொதுவாக முதுகெலும்பு முன்புறமாகவோ அல்லது பின்புறமாகவோ பார்க்கும்போது நேரான சீரமைப்புடன் இருக்கும். முதுகுத்தண்டில் ஏற்படும் பக்கவாட்டு வளைவு என்பது எலும்பு வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முதுகுத்தண்டில் உள்ள பக்கவாட்டு வளைவு எப்போதும் ஒரு பக்கமாக முதுகெலும்பு நெடுவரிசை சுழற்சியுடன் தொடர்புடையது.

முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட விலா எலும்புகள் அதனுடன் சேர்ந்து சுழலும்போது, ஒருபுறம் உடலின் பின்புறத்தில் எழும்பிய நிலையிலும், மறுபுறம் முன்பக்கத்தில் மார்புச் சுவருக்கும் இடையே இவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தோள்பட்டை மற்றொன்றை விட அதிகமாக தோன்றலாம். முதுகின் கீழ் பகுதியில் ஒரு வளைவு இடுப்பு வரிசையில் சமச்சீரற்ற தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் உடற்பகுதியை ஒரு பக்கமாக மாற்றும்.

இது பொதுவாக குழந்தையின் விலா எலும்பு அல்லது இடுப்புப் பகுதியில் சமச்சீரற்ற வரிசையை ஏற்படுத்தும்போது இந்த பிரச்னை தெரிய வருகிறது. இந்த குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், தவறான கருத்துக்களாலும் பெரும்பாலும் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையை பெறுவதில்லை. இதன் காரணமாக குழந்தையின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம், இது அவர்களின் சமூக தொடர்புகளை பாதிக்கிறது.

ஸ்கோலியோசிஸ் வகைகள் மற்றும் பிறவி முதுகெலும்பு குறைபாடுகள் குறித்து முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பனி கிரண் கூறியதாவது: குழந்தை கருவில் உருவாகும்போது முதுகெலும்பு வளர்ச்சியின் செயல்பாட்டில் ஒரு குறைபாடு ஒருபக்கம் அல்லது முதுகெலும்பின் ஒரு பாதியில் கூடுதல் எலும்புக்கு வழிவகுக்கும். இது முதுகுத்தண்டின் ஒரு பக்கத்தில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக அசாதாரண வளைவு ஏற்படலாம்.

இவை பிறந்த நேரத்தில் இருந்தாலும், அவற்றை பெற்றோர் கவனிக்காமல் விட்டுவிடலாம். இவற்றில் சில குழந்தைகள் வளரும்போது இது இன்னும் மோசமடையலாம் மற்றும் மிக இளம் வயதிலேயே கடுமையான ஊனம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நரம்பு தசை முதுகெலும்பு குறைபாடுகள்: பெருமூளை வாதம், போலியோ, மயோபதி போன்ற நரம்பியல் அல்லது தசை பிரச்னைகள் முதுகெலும்பை ஆதரிக்கும் முதுகெலும்பு தசைகளை பாதிக்கலாம். முதுகுத்தண்டு தசைகளில் உள்ள பலவீனம் முதுகெலும்பு வளைவிற்கு காரணமாக உள்ளது.

இடியோபாடிக் ஸ்கோலியோசிஸ்: இடியோபாடிக் ஸ்கோலியோசிஸ் ஏற்பட வெளிப்படையான காரணம் எதுவும் இல்லை. இது மிகவும் பொதுவான வகையாகும். 10 வயதிற்குப் பிறகு மற்றும் இளம்பருவத்தில் கண்டறியப்படுகிறது. இது பெண்களில் அதிகம் காணப்படுகிறது.  இதன் கடுமையான பாதிப்பு நுரையீரல் திறனை பாதிக்கிறது. சில நேரங்களில், நோய்த்தொற்றுகள் அல்லது எலும்பு முறிவுகள் அல்லது சில கட்டிகள் மூலம் எலும்பு பாதிப்பு அல்லது முதுகெலும்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி: இந்த பிரச்னையின் தீவிரத்தை குறைக்க இதை ஆரம்ப நிலையில் கண்டறிவதே சிறந்த வழியாகும். கடுமையான வளைவை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதில் அபாயங்கள் அதிகளவில் உள்ளன. முதுகெலும்பு உயரமாக வளரும்போது, வளைவுகள் மோசமடைவதற்கான ஒரு போக்கு உள்ளது. எலும்பு முதிர்ச்சியை அடையும் நேரத்தில் அது இன்னும் கடுமையானதாகிவிடும். தங்கள் குழந்தையின் பின்புறத்தில் ஏதேனும் பக்கவாட்டு வளைவு அல்லது சமச்சீரற்ற தன்மை இருப்பதை பெற்றோர் காணும் நிலையில் அவர்கள் உடனடியாக முதுகெலும்பு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பொதுவாக, ஒரு குழந்தை நேராக நிற்கும் போது, தோள்கள் ஒரே மட்டத்தில் இருக்கும், முதுகெலும்பு நேராகத் தோன்றும், இடுப்பு வரிசை சமச்சீராகவும் இருக்க வேண்டும். மார்பு சுவர்கள் முன் மற்றும் பின்புறம் சமச்சீராக தோன்றும். அவ்வாறு இல்லாத நிலையில் முதுகெலும்பு குறைபாடு உள்ளது என்பதை பெற்றொர் அறிந்து கொள்ள வேண்டும். முதுகுத்தண்டில் உள்ள வளைவு விலா எலும்புகளை ஒரு பக்கத்தில் பின்னோக்கி தள்ளுகிறது மற்றும் பின்புறத்தில் பெரிய கட்டி போன்றும் காட்சி அளிக்கிறது, இது ரிப் ஹம்ப் என்று அழைக்கப்படுகிறது.

குழந்தை முன்புறம் வளையும்போது இந்த விலா எலும்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முன்னோக்கி வளைக்கும் பரிசோதனையை ஸ்கோலியோசிஸ் பரிசோதனையாக மருத்துவர்கள் வழக்கமாக மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் எளிமையான சோதனையாகும், இதை எந்தவொரு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களும் செய்யலாம். இதை பெற்றோர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். இதனால் இந்த குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும்.

பல நாடுகளில் ஸ்கோலியோசிஸ் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து முதுகெலும்பு நிபுணர்களிடம் ஆலோசனை பெற பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களால் நடத்தப்படும் பரிசோதனை திட்டங்களை அரசுகள் நடத்தி வருகிறது. பெற்றோர் தங்கள் குழந்தையிடம் இதுபோன்ற மாற்றங்களைக் கண்டால், அவர்கள் உடனடியாக முதுகெலும்பு நிபுணரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இதற்கான முதல் பரிசோதனை நின்ற நிலையில் முதுகுத்தண்டை எக்ஸ்ரே எடுப்பதாகும்.

அதற்கான சிகிச்சையானது அதன் வகை, நிலை மற்றும் வளைந்திருக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும். லேசான வளைவுகளுக்கு 3 முதல் 6 மாத இடைவெளியில் எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆரம்பகால ஸ்கோலியோசிஸ் மற்றும் அதன் ஆபத்துகள்
6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் கண்டறியப்படும் ஸ்கோலியோசிஸ் ஆரம்பகால ஸ்கோலியோசிஸ் என்று கருதப்படுகிறது. இந்த வயதில் முதுகுத்தண்டில் ஏற்படும் குறைபாடு விலா எலும்பை சிதைத்து நுரையீரலின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆரம்பகால ஸ்கோலியோசிஸ் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இளம் வயதிலேயே நுரையீரல் மற்றும் இதய செயலிழப்பு போன்றவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஸ்கோலியோசிஸ் மற்றும் பிற முதுகெலும்பு குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் வேண்டும். நம் நாட்டில் முதுகெலும்பு குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. சிறு குழந்தையின் பின்புறத்தில் முதுகுத் தண்டில் ஏற்படும் லேசான விலகலை பலர் புறக்கணிக்கலாம். ஆனால் குழந்தை வளரும்போது, குறைபாடு மேலும் மோசமாகிவிடும். எனவே ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதற்கான முறையான சிகிச்சை அளித்து அதை மிகவும் எளிதாக சரி செய்துவிடலாம்.

இதில் மற்றொரு பிரச்னை என்னவென்றால், இதுபோன்ற குறைபாடுகளுக்கு சிகிச்சை இல்லை என்ற தவறான தகவலை பரப்புவதாகும்.  இந்த குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பெற்றோரை சரியான திசையில் வழிநடத்துவதில் குழந்தைகள் நல மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சையானது கடுமையான முதுகெலும்பு மற்றும் மார்புச் சுவர் சிதைவை தடுக்கும்.

இதன் மூலம் அவர்களின் ஆரம்பகால இறப்பு அபாயத்தைத் தடுக்கலாம். இதை பிளாஸ்டர் காஸ்ட்கள் அல்லது பிரேஸ்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். சிறு வயதிலேயே சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.  சிலருக்கு அறுவை சிகிச்சை நுட்பங்கள் தேவைப்படுகின்றன, இது முதுகுத்தண்டு வளர்ச்சியை அனுமதிக்கும் அதே வேளையில் ஆரம்ப காலங்களில் குறைபாட்டைக் கட்டுப்படுத்துகிறது. குழந்தை 10 முதல் 12 வயதை அடைந்தவுடன், பிரச்னையை மேலும் சரி செய்வதற்கு இறுதி இணைவு செயல்முறை செய்யப்படுகிறது.

* அறுவை சிகிச்சையின் முன்னேற்றங்கள்
ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை திருத்தம் முதுகெலும்பை இயல்பான சீரமைப்புக்கு கொண்டு வர சிறப்பு முதுகெலும்பு உள்வைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையானது நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. அறுவை சிகிச்சையின்போது முதுகுத் தண்டு செயல்பாட்டைக் கண்காணிக்கவும், நரம்பியல் காயத்தைத் தவிர்க்க அறுவை சிகிச்சை நிபுணர்களை எச்சரிக்கவும் நரம்பியல் கண்காணிப்பு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

நேவிகேஷன் அமைப்புகளுடன் கூடிய மேம்பட்ட பட வழிகாட்டுதல் நுட்பங்கள் முதுகெலும்பு உள்வைப்புகளை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவுகின்றன. சிறப்பு முதுகெலும்பு அறுவை சிகிச்சை மையங்களில் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த குழுக்களால் செய்யப்படும் போது, இந்த அறுவை சிகிச்சையில் ஏற்படும் ஆபத்து என்பது மிகவும் குறைவாக உள்ளது.

The post குழந்தைகளின் முதுகுத்தண்டில் பக்கவாட்டு வளைவு உள்ளதா? ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம், மருத்துவ நிபுணர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி