×
Saravana Stores

ஆமை வேகத்தில் சென்னை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்: கடந்த 10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை; ரயில் பயணிகள், ஊழியர்களுக்கு காப்பீடு கிடைப்பதில் சிக்கல்

* பதிவாளர் பதவியே காலியாக உள்ளதால் விசாரணையில் தாமதம்

* சிறப்பு செய்தி
ரயில்வே துறை மூலம் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு தொடர்பாக விசாரிக்கும் தீர்ப்பாயம், ஆமை வேகத்தில் செயல்படுவதாக ரயில்வே ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். இதேபோன்று விபத்தில் சிக்கி நிரந்தர உடல் ஊனத்துக்கு ஆளாகும் நபர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். விபத்தில் காயமடைந்த பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், அவர்களின் மருத்துவச் செலவுக்காக 2 லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும்.

விபத்தின் விளைவாக, உடலில் பகுதி அளவு ஊனம் ஏற்படும் நபருக்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இதேபோன்று, விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படுகிறது. இப்படி ரயில்வே துறையில் ஏற்படும் விபத்துகளுக்கு பலரும் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கின்றனர். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் பல வகையில் ஏமாற்றத்தை தருவது தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டில் உள்ளது.

இந்த தீர்ப்பாயம் 1 தலைவர், 4 துணை தலைவர்கள், 1 நீதித்துறை தலைவர் மற்றும் 1 தொழில்நுட்ப உறுப்பினரை கொண்டுள்ளது. இதில் பதிவாளர் உட்பட பல பணியிடங்கள் உள்ளன. பதிவாளரின் பணி முக்கியமான ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 45 வயதான பதிவாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் தற்போது வரை அந்தப் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் வழக்கு குறித்த விசாரணகளில் கால தாமதம் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, ஒன்றிய மோடி அரசு பதவியேற்கும் முன்னர் மொத்தம் 120க்கும் குறைவான வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 1000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ரயில்வே துறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். ரயில் விபத்துகளைப் பொருத்தவரை, அதிகமான பிரீமியம் தொகை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகை ஒவ்வோர் ஆண்டும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பயணக் காப்பீட்டுத் தொகையாக ஐஆர்சிடிசி மற்றும் பயணிகளிடமிருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 46.18 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் வெறும் 7 கோடி மட்டுமே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு காப்பீட்டுத் தொகையாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், மாநில அரசு பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு மாநில அரசு ரூ. 25 லட்சம் தருகிறது, ஆனால் ஒன்றிய அரசு ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்தால் வெறும் ரூ. 10 லட்சம்தான் தருகிறது. சிலருக்கு கிடைக்காமலும் உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் தொகையை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ரயில் பயணக் காப்பீடு பெறுவது எப்படி?: ரயில் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டதும், பயணக் காப்பீடு குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு குறுந்தகவலாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ காப்பீட்டு நிறுவனங்கள் அனுப்பும். மின்னஞ்சலில் இருக்கும் பிரத்யேக இணைப்புக்குள் சென்று, பயணிகள் தங்களின் பெயர், நாமினி குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதையடுத்து பயணிகளின் பயணச்சீட்டு பதிவு விவரங்களில், அவர்களின் பயணக் காப்பீடு எண் இடம் பெறும்.

எதற்கெல்லாம் இழப்பீடு கோர முடியும்?: எதிர்பாராத சூழலில் நடக்கும் ரயில் விபத்துகளின்போது, பயணிகளின் உயிரிழப்புக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்படும் என்று ரயில்வே சட்டம் 1989 இன் 124 பிரிவு கூறுகிறது. ஆனால் ரயில் விபத்துகளில் மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதல், வன்முறைச் சம்பவங்கள், திருட்டு, கொள்ளை, மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ரயில் பயணத்தின்போதோ அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள்ளோ விபத்து அல்லது தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து, அதனால் பாதிக்கப்படும் பயணிகள் மட்டுமே இழப்பீடு பெற இயலும். இதேபோன்று பயணச்சீட்டுப் பதிவு அலுவலகம், காத்திருப்போர் அறை, நடைமேடை உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் நிகழ்ந்து, அதனால் பயணிகள் இறக்கவோ, காயமடையவோ நேர்ந்தால் அவர்களும் அதற்கான இழப்பீட்டைப் பெறலாம்.

எதற்கெல்லாம் இழப்பீடு கோர முடியாது?: ரயில்வே சட்டத்தின் பிரிவு ‘124 ஏ’வின்படி, தற்கொலை, தானாக ஏற்படுத்திக் கொள்ளும் காயங்கள், குற்றச் செயல்கள் மற்றும் நோய்களின் காரணமாகப் பயணத்தின்போது பயணிகள் இறக்க நேர்ந்தால் அப்போது அவர்கள் இழப்பீடு கோர முடியாது. இதேபோல் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது இறப்பவர்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படாது. பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பட்சத்தில் ஒருவர் ரயிலில் பயணிக்கும்போது விபத்து நேர்ந்து, அதில் அவர் இறக்க நேர்ந்தாலும் அதற்கு இழப்பீடு வழங்கப்படாது. பயணக் காப்பீட்டுக்கான தொகை, ஒரு குறிப்பிட்ட விபத்தில் பாதிக்கப்படும் பயணிகளின் பல்வேறு தேவைகளுக்கு வழங்கப்படாது.

உடல் தகனம் செய்ய ரூ.10,000: ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவோ அல்லது அந்த உடல் தகனம் செய்யவோ 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையைப் பெறுவதற்கு உடனடியாக ஆவணங்கள் எதையும் தர வேண்டியதில்லை. விபத்தில் சிக்கி, உயிர் தப்பும் பயணிகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு விபத்து நிகழ்ந்த அன்று தாங்கள் வாங்கிய ரயில் பயணச் சீட்டு அல்லது நடைமேடை சீட்டை ஆதாரமாக அளிக்க வேண்டும்.

* ரயில் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரயில் பயணிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை எஸ்பிஐ ஜெனரல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் லிபர்ட்டி இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைத்து செயல்படுத்தி வருவதாக ஐஆர்சிடிசி நிர்வாகம் கூறுகிறது. இவற்றில், தாங்கள் செலுத்தும் பயணக் காப்பீட்டுக்கான பீரிமியம் தொகை எந்த நிறுவனத்துக்குச் செல்கிறது என்பது குறித்து பயணிகள் தங்களின் பயணச்சீட்டு முன்பதிவு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தியில் இருந்து அறியலா. ரயில் விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நேரும்போது அதில் பயணிகள் இறக்கவோ, மாற்றுத்திறனாளி நிலைக்கு ஆளாகும்போதோ அதற்கான இழப்பீடு கோரி, விபத்து நேர்ந்த தேதியில் இருந்து 4 மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

* சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
காப்பீட்டு நிறுவனம் கோரும் பிற கூடுதல் ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். விபத்தில் காயமடைந்த நபர் தாமாகவோ அல்லது அவரது உறவினர்கள் அல்லது அவர் அங்கீரித்துள்ள நபரின் மூலமாகவோ காப்பீட்டுத் தொகையைக் கோரலாம். விபத்தில் பயணி உயிரிழந்துவிட்டால், அவருக்கான இழப்பீட்டை அவரது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் கோரலாம். இதுவே விபத்தில் 18 வயதுக்குட்பட்ட நபர் இறக்க நேர்ந்தால் அவரது பாதுகாவலர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம். விபத்து நேர்ந்தது குறித்தும், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் விவரம் குறித்தும் ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெறப்படும் அறிக்கையை, இழப்பீடுக்கான விண்ணப்பத்துடன் அவசியம் அளிக்க வேண்டும்.

The post ஆமை வேகத்தில் சென்னை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்: கடந்த 10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை; ரயில் பயணிகள், ஊழியர்களுக்கு காப்பீடு கிடைப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai Railway Claims Tribunal ,Turtle Speed ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி