10 தொகுதியில் முதற்கட்டமாக விளையாட்டு மைதானம்: அமைச்சர் உதயநிதி பேட்டி

திருவாரூர்: ‘முதல் கட்டமாக 10 தொகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆய்வுக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:  திருவாரூர் மாவட்டத்திற்கான தேவைகள் குறித்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உடற்கல்வி பாடம் கட்டாயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக 77 பேர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பற்றாக்குறை இருந்து வரும் இடங்களில் அவர்கள் நிரப்பப்படுவார்கள்.  ஆவணப்படம் ஆஸ்கார் விருது பெற்றுள்ளதற்கு ஏற்கனவே எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். புதுவை மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது போல் தமிழகத்தில் விடுமுறை அளிப்பதற்கான அவசியம் உண்டா என பள்ளி கல்வித்துறையும், மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து முடிவு செய்வார்கள். தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்பது ஒரே நாளில் செயல்படுத்தக் கூடியது அல்ல. முதல் கட்டமாக 10 தொகுதிகளுக்கு விளையாட்டு மைதானம் குறித்து வரும் சட்டமன்ற கூட்டதொடரின் போது முதல்வர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: