×

பாலம் கட்டுமானத்திற்குரிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: நெடுஞ்சாலை பாலம் கட்டுமானத்திற்குரிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள், 11 தொகுதிகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, அலகினால் வடிவமைத்து “ STANDARD PLANS FOR HIGHWAY BRIDGES – RCCT BEAM AND SLAB SUPER STRUCTURE” என்ற புத்தகங்கள் தயாரிக் கப்பட்டுள்ளன. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் மேம்படுத்த மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட பாதுகாப்பான சாலை கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனவே, தேவையான இடங்களில் முறையே ஆறுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள், ரயில்வே கடவுகளில் மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள், பெருநகரம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சாலை மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட நீள் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதுதவிர நெடுஞ்சாலைப் பாலங்களுக்குரிய மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் கடந்த 1990, 1991 மற்றும் 1995ம் ஆண்டுகளில் ஒன்றிய அரசின் தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் (சாலை பிரிவு) வெளியிடப்பட்டன. பாலங்களின் கட்டுமான முறையில் ஏற்பட்ட பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வடிவமைப்பில் பெற்ற அறிவுசார் அனுபவத்தால் வடிவமைப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாற்றங்களை பின்பற்றி பாலங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, இதனால் பாலங்களுக்கான கட்டுமான மதிப்பீடு குறைந்துள்ளது. புதிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த வரைபடங்களுக்கான தேவையை உணர்ந்து, தற்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையால், நெடுஞ்சாலை பாலங்களுக்குரிய, மேற்கட்டுமானத்திற்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள், 11 தொகுதிகளாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, அலகினால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில், 10 தொகுதிகள் பல்வேறு வழித்தடங்கள் மற்றும் சாலை அகலங்களுக்கான Reinforced Cement Concrete T-Beam and Slab superstructure வரைபடங்கள் ஆகும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 12 மீட்டர் முதல் 30 மீட்டர் வரையிலான, 16 வகை நீளமுள்ள பால மேற்தள வரைபடங்கள் உள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தற்போது, 160 வகையிலான பால மேற்தளத்திற்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதி, 25 மீட்டர், 30 மீட்டர் மற்றும் 35 மீட்டர் நீளமுள்ள பல்வேறு வழித்தடங்களுக்கான Precast Prestressed Concrete Post Tensioned I-Girder and Reinforced Concrete slab type Composite Superstructure வரைபடங்கள் 9 வகைகளை உள்ளடக்கியது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பாலம் கட்டுமானத்திற்குரிய தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் அடங்கிய 11 தொகுதிகள் கொண்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,State Highways Department ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்