×

மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பட்டா வழங்குவதில் பல நிர்வாக சிக்கல்கள் இருந்தாலும் மக்களுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற அடிப்படையில், சிக்கல்கள் களையப்பட்டு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.சென்னை நீலாங்கரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் சார்பில் 01.03.2024 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க அமைச்சர் உட்பட 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு 13.06.2024 அன்று கூடி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரைய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரைய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்குவது, சென்னை பெருநகர வளர்ச்சி குழும மனைகளுக்கு பட்டா வழங்குவது ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அச்சிக்கல்களுக்கு தீர்வு காணுவது குறித்தும் விவாதித்து, தொடர்புடைய துறைத் தலைவர்களுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கியது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 411 பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப்பகுதி மனை இடங்களில் 516 பட்டாக்கள், நகர நிலவரித்திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில் 5070 பட்டாக்கள் என மொத்தம் 28,848 பட்டாக்கள் பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படவுள்ளது. இன்று சோழிங்கநல்லூர் பகுதியில் கிட்டத்தட்ட 2,000 பயனாளிகளுக்கு வீட்டு மனைக்கான பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கட்டிட அனுமதி ஆன்லைன் மூலமாக உடனடியாக பெற வேண்டும் என்ற திட்டத்தையும் நேற்று முன்தினம் முதல்வர் துவக்கி வைத்திருக்கிறார். வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த வீட்டுக்கான பட்டாவும் மிக மிக முக்கியம். ஏனென்றால், பட்டா வேண்டும் என்பவருடைய பல வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தி்ன்போது, நிச்சயம் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நான் அளித்திருந்தேன்.

தேர்தல் முடிந்து 2 மாதம்தான் ஆகியிருக்கிறது. இந்த 2 மாதத்திற்குள் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். பட்டா வழங்குவதில் பல நிர்வாக சிக்கல்கள் இருந்து வந்தது. ஆனால் இந்த சிக்கல்களை எல்லாம் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் சரி, மக்களுடைய மகிழ்ச்சி தான் முக்கியம், அந்த சிக்கல்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதன்படி இன்றைக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்ற அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Patta ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED அருந்ததியினருக்கு பட்டா வழங்க...