வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிக்கு, ரூ.24 லட்சதில் குப்பைகளை சேகரிக்க புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் குப்பைகளை மூன்று சக்கர சைக்கிள்களில் நாள்தோறும் சேகரித்து, அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில நேரங்களில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அதிகளவில் சேர்ந்து 3 சக்கர சைக்கிள்களில் தூய்மை காவலர்கள் எடுத்துச்செல்ல முடியாத சூழல் ஏற்படுகின்றன.
இதுபோன்ற, சூழலில் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேட்டரியில் இயங்கக்கூடிய 3 சக்கர வாகனத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி நேற்று வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் தற்போது முதல் கட்டமாக 8 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினர்.
ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய்காந்தி, லோகுதாஸ், கலையரசி, வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராமப்புற தூய்மை காவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
