×

கும்மிடிப்பூண்டி அருகே போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வழியுறுத்தி நடத்திய  போராட்டத்தை கைவிட மறுத்ததால் தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னம்பேடு பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் மேஜை, நாற்காலி மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நிர்வாகத்தின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை நுழைவுவாயில் முன் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், ஏஐடியுசி நிர்வாகிகள், காவல்துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சில கோரிக்கைகளை ஏற்பதாக நிர்வாகத்தினர் கூறினர்.

ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கோரி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பிரச்னைகள் குறித்து தொழிலாளர் நல ஆணையரகத்தில் முறையிடுங்கள் என போலீசார் அறிவுறுத்தி தொழிலாளர்கள் அனைவரையும் விடுவித்தனர்.

Tags : Kummidipoondi , Workers protesting near Kummidipoondi arrested
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...