×

தமிழ்நாட்டில் முதன்முறையாக வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி-சேலத்தில் தொடங்கப்பட்டது

சேலம் :  தமிழ்நாட்டில் முதன் முறையாக, சேலத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு புதிதாக செயலி தொடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால், வட மாநில தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, வட மாநில தொழிலாளர்களிடம் எவ்வித தாக்குதலுக்கு நடக்கவில்லை என்றும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட எஸ்பிக்களுக்கும் உத்தரவிட்டார்.

இதனிடையே,வட மாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ‘மைகிரன்ட் கேர்’ எனும் செயலி தமிழ்நாட்டில் முதன் முதலாக சேலத்தில் நேற்று தொடங்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி புதிய செயலியை தொடங்கி வைத்து, இந்த செயலியை வடமாநில  தொழிலாளர்கள் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்.

 பின்னர், இந்த செயலியை வடமாநில தொழிலாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயலியில், வட மாநில தொழிலாளர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  பின்னர், அவர்களது மாநிலம், ஆதார் எண் உள்ளிட்டவை சேகரிக்கப்படும். அவர்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த செயலி மூலம் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கூறுகையில், புதிதாக தொடங்கப்பட்ட செயலி மூலமாக சேலத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை இணைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வடமாநில  தொழிலாளர்களும் தங்களது  விவரங்கள் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்து பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பாக உள்ளேன் மற்றும் பாதுகாப்பு இல்லை என இரண்டு கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததால், பாதுகாப்பு  இல்லைஎன்று பதிவு செய்தால் உடனடியாக, அந்த செயலி மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்து விடும். உடனே எந்த இடத்தில் இருந்து வடமாநில தொழிலாளர் பதிவு செய்துள்ளார் என்பது குறித்து சோதனை செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசாரை அனுப்பி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்  வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து  போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடவுள்ளனர், என்றார்.

 இதையடுத்து இந்த புதிய செயலியை உருவாக்கிய சோனா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் போராசிரியர்களை பாராட்டி  சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி லைன்மேடு பகுதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பள்ளிகுழந்தைகள், முதியவர்களிடம் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தும், அறிவுரை கூறியும் சென்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து, சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள தனியார் மாவு மில் கம்பெனியில் 50 வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை கமிஷனர் மாடசாமி அங்கு சென்று தொழிலாளர்களிடம் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். மேலும் புதிதாக தொடங்கப்பட்ட செயலியை குறித்து எடுத்துரைத்தார்.

Tags : Tamil Nadu ,North State ,Salam , Salem: For the first time in Tamil Nadu, a new system has been launched for the protection of northern workers in Salem.
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்