×

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பகிர்ந்த பீகார் வாலிபர் கைது: ஜார்க்கண்டில் சிக்கினார்

திருப்பூர்: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல போலியான வீடியோக்களை பரப்பிய பீகார் வாலிபரை திருப்பூர் தனிப்படை போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்பட்ட வதந்தியால் ஏற்பட்ட அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த வாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் (32) என்பவருடைய சமூக வலைத்தள கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

அவரிடம் அந்த வீடியோக்களை நீக்கம் செய்ய போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்தார். இதையடுத்து பிரசாந்த் குமார் மீது வழக்குப்பதிந்த திருப்பூர் கிரைம் போலீசார் அவரை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பிரசாந்த் குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று அவரை திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


Tags : Bihar ,Jharkhand , Bihar youth arrested for sharing fake video of northerners being attacked: Caught in Jharkhand
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...