கூடலூர் : கூடலூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி சாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு. இந்த பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் சந்திரமோகன். இவர் தந்தையின் பட்டாநிலத்தில் சுமார் ஆயிரம் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். வாழை மரங்கள் நன்கு காய்த்து குலை தள்ளிய நிலையில் இருந்தது. இந்நிலையில் வாழைத்தோட்டத்திற்கு மேல் உயரழுத்து மின்கம்பி செல்கிறது. இதனால் மின் விபத்து அபாயம் உள்ளதாக கூறி வாழை மரங்களை மின் வாரிய ஊழியர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.
இது குறித்து சந்திரமோகன் கூறுகையில், ‘‘எனது மகளின் உடல்நல குறைவு காரணமாக சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது அலைபேசியில் இந்த தகவல் குறித்து மரங்களை வெட்டும் பணிக்காக வந்தவர்கள் தெரிவித்தனர். தோட்டத்தில் உள்ள பணியாளர் உதவியுடன் வாழை மரத்தின் இலைகளை வெட்டுமாறு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் குலை தள்ளிய வாழை மரங்களையே வெட்டி சாய்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
ஒரு நாள் கால அவகாசம் கொடுத்திருந்தால் நான் பாதுகாப்பாக இலைகளை விட்டு மரங்களை பாதுகாத்திருப்பேன். இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள், கூடலூர் ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளேன்’’ என தெரிவித்தார். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வாழை மரங்களை வெட்டியவர்கள் அதன் அருகிலேயே மேட்டு நிலத்தில் மின்கம்பிகளுடன் உரசியபடி உள்ள மரங்கள் செடி, கொடிகளை வெட்டாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த மின் கம்பத்தின் வழியாக செல்லும் மின் கம்பிகளை கம்பத்தில் தாங்கிப் பிடித்து கம்பத்துக்கு மின்சாரம் செல்லாமல் பாதுகாக்கும் பீங்கான பிளேட்டுகள் உடைந்த நிலையில் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேவர் சோலை தனியார் தோட்டத்தில் பணிபுரிந்த பெண் தொழிலாளி ஒருவர் கம்பத்தை தொட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கம்பத்தில் உள்ள பீங்கான் பிளேட்டுகள் உடைந்ததால் மின் கம்பி மூலமாக முன் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற பாதுகாப்பற்ற நிலை பல இடங்களில் உள்ள மின்கம்பங்களில் உள்ளது.
உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் வழியில் தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்றும், அதனுடன் இணைந்திருக்கும் மரம் செடி கொடிகளையும் வெட்டி அகற்றி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
