×

காசிமேட்டில் அலைமோதிய மக்களால் திணறியது மீன் மார்க்கெட்: கடந்த வாரத்தை விட மீன் விலை ஏற்றம்

சென்னை: காசிமேட்டில் நேற்று மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த வாரத்தை விட மீன் விலை நேற்று அதிகரித்திருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் காசிமேட்டில் மீன்விற்பனை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான கூட்டம் காசிமேட்டில் குவிந்ததால் காசிமேடு திருவிழாபோல காட்சி அளித்தது. விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள்,  மீன் விற்பனை செய்யும் பெண்கள், ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் அதிகாலை முதலே ஏலம் எடுக்க அங்கு குவிந்தனர்.கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவராத்திரி, மாசி அமாவாசை, மாசிக்கிருத்திகை என தொடர்ந்து விரத நாட்கள் வந்ததால் காசிமேட்டில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே காசிமேடு பரபரப்பானது.

கடந்த வாரங்களில் முழு வஞ்சிரம் மீன் ₹700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ₹850க்கு ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. துண்டுகளாக கழிவுகள் நீக்கி வெட்டப்பட்ட மீன் ₹1,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ₹1,100க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை வவ்வால் ₹1,000த்தில் இருந்து ₹1,100க்கும், கருப்பு வவ்வால் ₹850க்கும் விற்பனை செய்யப்பட்டது. சங்கரா கடந்த வாரம் ₹400ல் இருந்து  ₹450க்கும், சுறா ₹450க்கும், இறால் ₹300ல் இருந்து ₹350க்கும், களவான் ₹350ல் இருந்து ₹400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நண்டு ₹350 முதல் ₹400க்கும்,கொடுவா ₹400ல் இருந்து ₹500க்கும், பாறை ₹450 முதல் ₹500க்கும், அயிரா ₹350, ஷீலா ₹300, காணங்கத்தை, கேரை உள்ளிட்ட மீன்கள் ₹300க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீன் பிரியர்கள் குவிந்ததால் காசிமேடு மீண்டும் களை கட்டியது. வியாபாரிகளும் அதிக அளவு மீன் வாங்க வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.Tags : Kasimat , Fish market choked by throngs of people in Kasimat: Fish prices higher than last week
× RELATED தடை காலம் முடிந்து முதல் ஞாயிறு...